காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயா நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மருத்துவமனையில் காலமானார்.
1924 ஆண்டு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை – கரம்பொன்னில் பிறந்த சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற முழுப்பெயரைக் கொண்ட இவர் லண்டன், கென்யா போன்ற நாடுகளில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி தாயகம் திரும்பினார்.
நாடு திரும்பிய அவர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன் சேர்ந்து 1979ஆம் ஆண்டு காந்தீயம் அமைப்பை உருவாக்கினார். இந்தியத் தமிழர்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.
1982 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டார். வெலிக்கடை சிறையில் தமிழ் கைதிகள் மீதான தாக்குதலில் உயிர் தப்பிய இவர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார். 1983 செப்ரெம்பரில் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்றார்.
1984 இல் புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரனுடன் மொறீசியஸ் தீவுக்கு சென்ற இவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக சுகயீனமடைந்திருந்த அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது 91ஆவது வயதில் காலமானார்.