கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பெருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறன.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்கள், ஒரு அங்கத்தவர் குடும்பங்கள், காணி கிளிநொச்சியில் இருந்தும் நிரந்தரமாக மாவட்டத்தில் வசிக்காதவர்கள் என அனைத்து தர்பினர்களிடமும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 11 ஆயிரம் பொருத்து வீட்டு விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அதனை கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு 6500 விண்ணப்பங்களும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு 2300 விண்ணப்பங்களும், பூநகரி பிரதேச செயலக பிரிவுக்கு 1500 விண்ணப்பங்களும், பளை பிரதேச செயலக பிரிவுக்கு 700 விண்ணப்பங்களும் என மாவட்ட செயலகம் வழங்கியுள்ளன.
எனவே பொருத்தமற்ற பொருத்து வீட்டுக்கு மக்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என வெளிக்காட்டவே அமைச்சு இவ்வாறு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த பொருத்து வீட்டுத் திட்டத்தை விட்டால் வேறு வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறாது, எனவே கொட்டில்களில் இருப்பதனை விட கிடைக்கின்ற எதனையாவது பெற்றுக்கொள்வோம் என்ற நிலையில் மக்கள் விருப்பம் இன்றி விண்ணப்பங்களை பூரணப்படுத்தி வழங்கி வருவதாகவும் சில அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.