கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்படும் இராணுவ வீரரை, விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்ட, ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை தனக்கு நன்கு தெரியும் எனவும், தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரரே அவர் எனவும் மூதாட்டி குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த வந்த கிளிநொச்சி பொலிஸார், கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி பாதிக்கப்பட்ட மூதாட்டியை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்நிறுத்தி திறந்த வாக்குமூலத்தினை பதிவு செய்தனர்.
இதன் போது, சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக மன்றுக்கு அறிவிக்குமாறும், சம்பவ தினத்தன்று பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரை குறித்த இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவத்தினரை காட்டுமாறும் பொலிஸாருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று (திங்கற்கிழமை) குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்டதென சந்தேகிக்கப்படும், இராணுவ வீரரை கைது செய்த பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவிடம் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து, மேற்படி சந்தேக நபரான இராணுவ வீரரை விளக்கமறியலில் வைக்குமாறும், அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.