கிளிநொச்சி நகரை அண்டிய சில பிரதேசங்களிலுள்ள வியாபார நிலையங்களின் விபரங்களைத் திரட்டிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் வியாபார நிலையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு வியாபார நிலையமாகச் சென்ற இரண்டு இராணுவத்தினர் கடையின் பெயர், கடையின் உரிமையாளர் பெயர், கடையில் எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள், கடையில் என்ன வியாபாரம் நடக்கின்றது, எந்தக் கிராமசேவையாளர் பிரிவு, கிராமசேவையாளரின் பெயர், கடை உரிமையாளரின் வீட்டு முகவரி, குடும்பத்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்காக நேற்று முற்பகல் 11.30 மணியளவில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு விபரம் திரட்ட இரண்டு இராணுவத்தினர் சென்றுள்ளனர்.
கடை உரிமையாளரிடம் தகவல் திரட்டும்போது நீங்கள் என்ன பதிவு எடுக்கிறீர்கள்? இப்பொழுதும் நாங்கள் இராணுவத்தின்கீழா இருக்கிறோம்? இப்படி எத்தனை தடவைகள்தான் பதிவை மேற்கொண்டுள்ளீர்கள்? சிவில் நடவடிக்கைக்கு காவல்துறை இருக்கும்போது நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என பல கேள்விகளைக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இராணுவத்தினர், காவல்துறை இருந்தாலும் எங்களுக்குக் கீழ்தான் எல்லாம் நடக்கின்றது எனக் கூறியுள்ளனர்.
தங்களுக்கு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின்படியே தகவல் திரட்ட வந்துள்ளோம். உங்களுக்கு தகவல் தருவதில் பிரச்சனையிருந்தால் இரணைமடு முகாமுக்குச் செல்லவேண்டி வரும் என எச்சரித்துள்ளனர்.
அத்துடன், எல்லாக் கடைக்காரர்களும் விபரங்களைத் தரும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை? மரணம் ஒரு தடவைதான் வரும் என்னால் நீங்கள் நினைக்கும்போதெல்லாம் தகவல் தரமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வற்புறுத்தி அந்தக் கடையின் விபரங்களைத் திரட்டிய படையினர் உரிமையாளரின் விபரங்களையும் திரட்டிச் சென்றுள்ளனர்.
இவ்வாறே, கிளிநொச்சியில் உதயநகர் கிழக்கு, மேற்கு ஆனந்த நகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள கடைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் விபரங்களும் படையினரால் திரட்டப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.