கிளிநொச்சியில் இடம்பெறும் போராட்டத்துக்கு வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு பூரண ஆதரவு

sajeevanகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதன்கிழமை நடத்தவுள்ள போராட்டத்துக்கு வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு முழு ஆதரவை வழங்குமென குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார்.

திட்டமிட்டு இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையிலும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வருமாறு சஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இனிவரும் காலங்களில் காணிகள் சுவீகரிக்கப்படும் இடங்களில் எல்லாம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக கிளிநொச்சிப் போராட்டத்தினை தொடர்ந்து வலி.வடக்கு மக்களுடைய காணியை விடுவிக்கக் கோரியும் ஒரு போராட்டத்தை நாம் ஒழுங்கு செய்யவுள்ளோம்.

எனவே எமது மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் எந்தவிதமான பேதங்களும் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலும், தமிழ் மக்களின் நிலமை தொடர்பாக சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் சஜீவன் மேலும் தெரிவித்தார்.

Related Posts