வடக்கிற்கான பொருளாதார நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாதுள்ள பொருளாதார சந்தை தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கிற்கான பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியா – தாண்டிக்குளத்தில் அமைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் குறித்த பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்படுகின்றது.
இதுஇவ்வாறிருக்க கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார வர்த்த சந்தை நிர்மாணிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரை திறந்துவைக்கப்படவில்லை.
கடந்த 25 வருடங்களுக்கு வடபகுதி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தென்னிலங்கையிலிருந்து வரும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்குமான ஒரு பொருளாதார சந்தை கிளிநொச்சியில் 25 வருடங்களுக்கு மேல் செயற்பட்டுவந்தது.
எனினும் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக இதன் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து தம்புள்ளை சந்தை பிரபலமடைந்தது.
இருப்பினும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு மக்கள் கிளிநொச்சியில் மீள குடியமர்த்தப்பட்டனர்.
இந்தநிலையில் குறித்த சந்தையை மீள் அமைக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து 2011 ஆம் ஆண்டு மத்திய கூட்டுறவு அமைச்சின் ஊடாக பல இலட்சம் ரூபா செலவில் வர்த்தக சந்தை அமைக்கப்பட்டது.
எனினும் நிலம் தொடர்பான சில பிணக்குகள் நிலவியதனால் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிர்மாணப் பணிகள் 2015 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ள போதிலும் இதுவரை குறித்த சந்தை மக்கள் பயன்பாட்டிற்கென திறந்துவைக்கப்படவில்லை.
எனவே இந்த சந்தையை மீள இயக்கி விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.
வவனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது மட்டுமன்றி கிளிநொச்சி சந்தை தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.