கிலாரியின் வெற்றிக்காய் நல்லூரில் நாளை 1008 தேங்காய் உடைப்பேன்- சிவாஜி

420258494USA-flagநவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கிலாரி கிளின்ரன் வெற்றி பெற வேண்டி சமயப்பிரார்த்தனைகளை மேற்கொள்ளப்போவதாக வட மாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாளை (2)  நல்லூர் ஆலய முன்றலில் 1008 தேங்காய்கள் உடைத்தும் பெரியன்னை தேவாலயத்தினில் மெழுகுதிரி ஏற்றியும் பிரார்த்தனை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை (01) அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் அமெரிக்க வாழ் தமிழ் மக்களையும் கிலாரி கிளின்டன் வெற்றிக்காக பாடுபட அழைப்பு விடுத்துள்ளார்.

இறுதி யுத்த காலப்பகுதியினில் விடுதலைப்புலிகளது கப்பலை காட்டிக்கொடுத்தது அமெரிக்க அரசு என்றும் அதற்கு உடந்தையாக கிலாரியும் இருந்ததாக கூறப்படுகின்றதேயென எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அமெரிக்க அரசு எமது போராட்டத்தை அழிக்க மஹிந்த அரசுடன் கூட்டு சேர்ந்து அனைத்தையும் செய்தது. ஆனாலும் ஜநாவினில் இலங்கை அரசிற்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவருவதில் முன்னின்று செயற்பட்டவர் கிலாரியாவார்.

அவர் ஜனாதிபதி பதவியேற்றால் தமிழ் மக்கள் நல்லதொரு தீர்வை பெறமுடியுமென நம்புவதாகவும் தெரிவித்தார். சிலர் இவ்வாறு தேங்காய் உடைப்பதற்கான பணத்தை யுத்த அவலங்களுடன் வாழும் மக்களிற்கு வழங்க ஆலோசனை சொல்வரார்கள். ஆனாலும் கிலாரி ஜனாதிபதியாக பதவியேற்கும் தினத்தன்று 108 குடும்பங்களை பொறுப்பேற்று அவர்களிற்கான முழுமையான வாழ்வாதார உதவிகளை அமெரிக்காவிலுள்ள கிலாரிக்கான தமிழர்கள் அமைப்பு மூலம் செய்து வழங்குவேன் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

Related Posts