கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிய கட்டுப்பாடுகள்? – இராணுவத் தளபதியின் அறிவிப்பு

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களில் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 228 பேரும் கம்பஹாவில் 108 பேரும் களுத்துறையில் 68 பேரும் திருகோணமலையில் 18 பேரும் கண்டியில் 40 பேரும் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட இராணுவத் தளபதி, அவிசாவளையிலுள்ள 02 தொழிற்சாலைகளில் 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொம்பனித்தெரு, புளூமென்டல் ஆகிய பகுதிகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வௌிநாடுகளில் இருந்து 600இற்கும் மேற்பட்டோர் நேற்று அழைத்து வரப்பட்ட நிலையில் இன்றும் வௌிநாடுகளில் தங்கியுள்ள மேலும் பலர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts