கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘பிசாசு’, ‘கயல்’, ‘கப்பல்’, ‘மீகாமன்’, ‘சுற்றுலா’, ‘வெள்ளைக்கார துரை’ ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன.
‘பிசாசு’ படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். டைரக்டர் பாலா தயாரித்து உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். திகிலான பேய் படமாக தயாராகியுள்ளது. மிஸ்கின் எடுக்கும் முதல் பேய் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளது. கிறிஸ்துமசுக்கு முன்னதாக 19–ந்தேதி இப்படம் வருகிறது.
இதோடு ரிச்சர்ட் நடிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ள ‘சுற்றுலா’ என்ற பேய் படமும் வருகிறது. இவ்விரு படங்களுக்கும் தணிக்கை குழுவினர் ‘யுஏ’ சான்று அளித்துள்ளனர்.
வருகிற 25–ந்தேதி பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படம் வருகிறது. 2004–ல் தமிழக கடலோர பகுதிகளை தாக்கி பேரழியை உண்டு பண்ணிய சுனாமியை மைய கருவாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவில் ‘யு’ சான்று கிடைத்துள்ளது.
ஷங்கர் தயாரிப்பில் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கியுள்ள ‘கப்பல்’ படமும் கிறிஸ்துமஸ் அன்று வருகிறது. காமெடி படமாக தயாராகியுள்ளது. வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன் நடித்துள்ளனர். இந்த படமும் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.
ஆர்யா, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள ‘மீகாமன்’ படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். காதல், ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. தணிக்கை குழு ‘யுஏ’ சான்று அளித்துள்ளது.
‘வெள்ளைக்கார துரை’ படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ளனர். எழில் இயக்கியுள்ளார். காதல் காமெடி படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரித்து உள்ளார். இந்த படத்துக்கும் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.