கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு காபூலில் உள்ள பக்ராமி பகுதி அருகே தனது சகோதரருடன் வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் ஷபூர் அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் இருந்து காயமின்றி உயிர்தப்பினார். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நபர்களை அந்நாட்டு பொலிஸார் மும்முரமாக தேடிவருகின்றனர். மேலும், ஷபூர் மீது தாக்குதல் நடத்தியதற்கு எந்த குழுவோ அல்லது தனி நபரோ பொறுபேற்கவில்லை. ஷபூர் ஷத்ரான் மீது ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

29 வயதாகும் ஷபூர் ஷத்ரான், அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 ரி-ருவென்ரி போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

Related Posts