கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் இடம்பெற்ற கொலை தொடர்பில் நேற்றயதினம் நடைபெறவிருந்த தொடர்விசாரணை யாழ்.மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன் மற்றும் சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேக நபர்கள் அறுவருக்கும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 தடயப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் சாட்சிகள் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
குறித்தவழக்கின் விசாரணையானது நேற்றயதினம் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் சந்தேக நபர்கள் சார்பாக சிரேஷ்டசட்டத்தரணிகள் சுகாஷ், சுமந்திரன், சிவஞானம், திருக்குமரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த வழக்கு தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்களை தற்சமயம் நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியாமல் உள்ளது என அரசு சட்டத்தரணியால் மன்றில் கூறியதை அடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் 30.05.2017 ஆம் நாளுக்கு ஒத்திவைத்ததுடன், வழக்கினை தொடர் விசாரணையாக நடாத்துவதற்கும் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.