யாழ்ப்பாணம் செங்குந்தா மைதான கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தபட்ட ஏழு எதிரிகளில் முதலாம், இரண்டாம், ஏழாம் எதிரிகளான அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்குமே இவ்வாறு கடூழியச் சிறைத் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபா தண்டமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள ஏழாம் எதிரி உமாகாந்தன் கிரிகேசன் இல்லாமலேயே வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. எனவே, சர்வதேச பொலிசாரின் துணையுடன் இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செங்குந்தா விளையாட்டு மைதானத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற கிரிக்கட் விளையாட்டுப் போட்டியின் போது, கிறிஸ்தோபர் பிரேமன் என்ற 21 வயது கிரிக்கட் விளையாட்டு வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், வீரையா ஜெயப்பிரகாஷ் ஜெயலத் எமில்டன், இராஜேஸ்வரன் சப்தஸ்வரன், அமிர்தலிங்கம் விதன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய 7 எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ் மேல் மன்றத்தில் பொது எண்ணத்துடன் கொலை செய்ததாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஏழு பேரில் 7 ஆவது எதிரியாகிய உமாகாந்தன் கிரிகேசன் தலைமறைவாகியதையடுத்து, அவர் இல்லாமலேயே, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
.இந்த வழக்கில் அரச தரப்பில் முதலாவது சாட்சியாக சாட்சியமளித்த இராமகிருஸ்ணன் அகில்ராஜ் முதலாம் எதிரி சோபஸ் கொல்லப்பட்ட பிரேமனுக்கு கறுத்த கொட்டன் பொல்லால் தலையில் அடித்ததையும், ஏழாம் எதிரி கிரிகேசன் இறந்த பிரேமனுக்கு விக்கட்டால் வயிற்றில் அடித்ததையும் நேரில் கண்ணால் கண்டதாக தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
அடிபட்ட பிரேமன், காயமடைந்து நிலத்தில் சரிந்தார். மைதானத்தில் விழுந்து கிடந்த அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முயற்சித்த போது, அவ்வழியால் முதலில் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் அவரை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டன. பின்னர் வயோதிப ஐயா ஒருவருடைய முச்சக்கர வண்டியிலேயே, அடிகாயங்களுக்கு ஆளாகிய பிரேமனை யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தேன். ஏழு நாட்கள் கோமா நிலையில் இருந்த பிரேமன் 21 ஆம் திகதி மரணமடைந்தார்.
சம்பவம் நடைபெற்ற விளையாட்டு மைதானத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த சமயம் பிரேமன் துடுப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக, தனது முறைக்காகக் காத்திருந்தபோது, கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, முதலாம் எதிரி சோபஸ் இரண்டாம் எதிரி நிசாந்தன் மூன்றாம் எதிரி ஜெயப்பிரகாஷ் எழாம் எதிரி கிரிகேசன் ஆகியோர் விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர்.
இரண்டாம் எதிரியாகிய நிசாந்தன் முதலில் விக்கட்டைத் தட்டிவிட்டார். அவரைத் தொடர்ந்து மற்றைய எதிரிகளும் விக்கட்டைத் தட்டிவிட்டு எங்களைத் தாக்கினார்கள். அவ்வாறு தாக்கியபோதுதான், கொல்லப்பட்டவராகிய பிரேமனை முதலாம் எதிரி சொபசும் 7 ஆம் எதிரி கிரிகேசனும் முறையே கொட்டன் பொல்லாலும் விக்கட்டினாலும் தாக்கினார்கள். அவ்வாறு அவர்கள் தாக்கியபோது, இரண்டாம் எதரியாகிய நிசாந்தன் ஏனையவர்களைத் தாக்கி பிரேமனிடம் செல்லவிடாமல் துரத்தினார் என அகில்ராஜ் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.
முதலாவது சாட்சியைத் தொடர்ந்து சாட்சியமளித்த ஏனைய அரச சாட்சிகள் அகில்ராஜின் சாட்சியத்தை ஒப்புறுதி செய்து சாட்சியமளித்தனர்.
இறந்தவராகிய கிறிஸ்தோபர் பிரேமனின் சடலத்தைப் பிரேத பரிசோதன செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் கந்தையா ரட்னசிங்கம் மருத்து அறிக்கையை சமர்ப்பித்து, நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
‘இறந்தவருடைய தலை, மண்டையோடு, வயிறு ஆகிய இடங்களில் காயங்கள் இருந்தன. தலையில் பாரதூரமான காயம் ஏற்பட்டிருந்தது. மொட்டையான ஆயுதத்தினால் இந்தக் காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இயற்கையின் சாதாரண போக்கில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய காயங்களாக அவைகள் காணப்பட்டன’ என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். விசாரணைகளின் முடிவில், நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் முதலாம் எதிரி சோபஸ், இரண்டாம் எதிரி நிசாந்தன், ஏழாம் எதிரி கிரிகேசன் ஆகியோர் குற்றவாளிகளை நீதிமன்றம் குற்றவாளிகளாகக் கண்டுள்ளது என்று நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
அவர் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களை நீதிமன்றம் கவனமாகப் பரிசீலனை செய்துள்ளது. எதிரிகள் ஏழு பேரும், சட்டவிரோத கூட்டம் கூடி, பொது எண்ணத்துடன் ஒன்று சேர்ந்து கொல்லப்பட்டவராகிய கிறிஸ்டோபர் பிரேமனை கொலை செய்துள்ளார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுடன் எதிரிகள் எவ்வாறு சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதை ஆய்வு செய்த போது, சில எதிரிகள் அவ்விடத்தில் நின்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் கிறிஸ்டோபர் பிரேமன் மீது எதுவிதமான தாக்குதல்களும் நடத்தவில்லை.
அதனடிப்படையில், மூன்றாவது எதிரி ஜெயப்பிரகாஷ், நாலாம் எதிரி எமில்டன், ஐந்தாம் எதிரி சப்தஸ்வரன், ஆறாம் எதிரி விதன், ஆகிய நான்கு பேருக்கும் எதிராக வழக்குத் தொடுநர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் கொலைக் குற்றச்சாட்டை எண்பிக்கத் தவறியுள்ளார். எனவே, இந்த நால்வரையும் இந்த நீதிமன்றம் விடுதலை செய்கின்றது. .
முதலம் எதிரி சோபஸ், இரண்டாம் எதிரி நிசாந்தன், ஏழாம் எதிரி கிரிகேசன் இந்த மூவரும் பொது எண்ணத்துடன் ஒன்று சேர்ந்து பிரேமன் என்பவரை ஆட்கொலை புரிந்துள்ளார்கள் என்பது விசாரணைகளின் மூலம் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதலாம் எதிரி சோபஸ் கொல்லப்பட்ட பிரேமனை கறுத்த கொட்டனால் அடித்தது சாட்சியங்களின் மூலம் எண்பிக்கப்பட்டுள்ளது. ஏழாம் எதிரி கிரிகேசன் இறந்தவரை விக்கட்டால் வயிற்றில் அடித்ததும் எண்பிக்கப்பட்டுள்ளது, மருத்து பரிசோதனை அறிக்கை மற்றறும் மருத்துவரின் சாட்சியத்தின்படி, இறந்தவரின் வயிற்றிலும் தலையிலும் காயங்கள் காணப்பட்டன என்பதும் எண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இரண்டாம் எதிரி நிசாந்தன், மற்றைய இரண்டு எதிரிகளுக்கும் உதவியாகவும் ஒத்தாசையாகசுவும் இருந்து ஆட்கொலை புரிந்துள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது, எதிரி நிசாந்தன் இறந்தவரை அடிக்கவில்லை. ஆனால் இறந்தவராகிய பிரேமன் விளையாடிய அணி உறுப்பினர்களை விக்கட்டால் அடித்து அவர்களை மைதானத்தில் இருந்து கலைத்துள்ளார்.
முதலாம் எதிரி சோபசும் ஏழாம் கிரிகேசனும் இறந்வரைத் தாக்கியபோதே, இரண்டாம் எதிரி நிசாந்தன் இவ்வாறு மற்றையவர்கள் மீது தாக்குதல் நடதியுள்ளார்.
இறந்தவரை எதிரிகள் இருவர் தாக்கியபோது, அங்கிருந்த பிரேமனின் அணி உறுப்பினர்கள் அவரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு அருகில் செல்ல அனுமதிக்காத வகையில், இரண்டாம் எதிரி நிசாந்தன் அந்த உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அதேநேரம் சோபசும் கிரிகேசனும் இறந்தவரைத் தாக்கியபோது, நிசாந்தன் அதனைத் தடுக்கவில்லை.
நிசாந்தனே, முதலில் மைதானத்திற்குள் சென்று விக்கட்டைத் தட்டிவிட்டு, பிரச்சினையை ஆரம்பித்தவராவார். எனவே, மூன்று எதிரிகளும் பொது எண்ணத்துடன் பிரேமனைக் கொலை செய்தார்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி எண்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் விளையாட்டு சம்பந்தமான தரமான மனப்பான்மை இருக்க வேண்டும். கிரிக்கட் விளையாட்டு என்பது கனவான்களின் விளையாட்டாகும். எனவே இந்த விளையாட்டில் அந்த மனப்பான்மை உயர்ந்த தன்மையுடையதாக இருப்பது அவசியமாகும்.
இந்த வழக்கில் கனவான் விளையாட்டாகிய கிரிக்கட் விளையாட்டு நடைபெறும் மைதானத்தை இந்த 3 எதரிகளும் கொலைக்களமாக மாற்றியுள்ளனர். மதிப்புக்குரிய கிரிக்கட் விளையாட்டின் உபகரணங்களை இவர்கள் கொலை செய்வதற்குரிய ஆயுதங்களாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். உலக மக்களுடைய மனம் கவர்ந்த கிரிக்கட்டை கொலை விளையாட்டாக இவர்கள் மாற்றியுள்ளனர்.
விளையாட்டு விளையாட்டாகவே இருக்க வேண்டும். விளையாட்டு எப்போது விபரீதமாக மாறகின்றதோ அப்போது, வன்செயல் தலைவிரித்தாடும். அத்தகைய வன்செயலில் பங்குபற்றிய அனைவரும் குற்றம் புரிந்தவர்களாகவே கருதப்படுவார்கள். இந்த வழக்கில் இறந்தவராகிய இளைஞன் கிறிஸ்டோபர் பிரேமன் கிரிக்கட் விளையாடுவதற்காக 14.03.2010 அன்று செங்குந்தா மைதானத்திற்கு வந்தார். பின்னர் அவரின் சடலமே அவருடைய வீட்டிற்குச் சென்றது.
இருபத்தியொரு வயதில் வாழ வேண்டிய வாலிபனை ஆட்கொலை புரிந்த குற்றச்சாட்டுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்குவதே அற்கு நிவாரணமாகும். கிரிக்கட் மைதானத்தில் இந்தக் கொலையைப் புரிந்தமை மன்னிக்க முடியாத குற்றம். கிரிக்கட் விளையாடச் செல்பவர்கள், பிணங்களாகத்தான் வீடுகளுக்கு வருவார்கள் என்ற அச்ச நிலையை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது.
அநியாயமான முறையில் வாழ வேண்டிய ஒரு வாலிபனின் உயிரி பறிக்கப்பட்டுள்ளது. கிரிக்கட் மைதானங்கள் மட்டுமல்ல எந்த விளையாட்டுப் போட்டியின்போதும் நடைபெறும் ஆட்கொலைகளுக்கு இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்.
ஆகவே எனவே முதலாம் எதிரி அருளானந்தம் சோபஸ், இரண்டாம் எதிரி இராஜகுலேந்திரன் நிசாந்தன், ஏழாம் எதிரி உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்கும் இந்த நீதிமன்றம் தலா 15 வருடங்கள் கரூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கின்றது.
அத்துடன் அவர்கள் பத்தாயிரம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும். தண்டப் பணத்தைச் செலுதத்தத் தவறினால் ஒரு வருடம் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இந்த வழக்கில் குற்றவளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழாம் எதிரி உமாகாந்தன் கிரிகேசன் நீதிமன்றில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தலைமறைவாகியுள்ள அவரை சர்வதேச பொலிசார் ஊடாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு இந்த நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்குக் கட்டளை பிறப்பிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.