கிராம அலுவலகர் கொலை; பெண் கிராம அலுவலகரின் கணவர் கைது!!

மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஆடு மேய்ப்பவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பெண் கிராம அலுவலகர் ஒருவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அணிந்திருந்தது எனச் சந்தேகிக்கப்படும் குருதிக் கறை படிந்த சேட் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம அலுவலகராகக் கடமையாற்றும்
விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

அவர் கடந்த 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்றுள்ளார். அதன்பின்னர் ஆத்திமோட்டை – கள்ளியடியில் தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார்.

அவர் உடனடியாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

மன்னார் பொது வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் நிர்வாக கிராம அலுவலகரின் தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தாக்கியமையால் அவர் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இலுப்பக்கடவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

“நிர்வாக கிராம அலுவலகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறிது நேரத்தில் பெண் கிராம அலுவலகர் ஒருவர் பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

அதுதொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஆடு மேய்க்கும் ஒருவரும் கிராம அலுவலகர் தாக்கப்படும் போது அந்த இடத்தில் இருந்துள்ளார். ஆடு மேய்ப்பவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பெண் கிராம அலுவலகரின் கணவர் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தின் போது சந்தேக நபர் அணிந்திருப்பார் என்று சந்தேகிக்கப்படும் குருதிக் கறை படிந்த சேட் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற போது தான் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெறச் சென்றிருந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட நிர்வாகக் கிராம அலுவலகர் பெரும் தொகை பணத்தை பெண் கிராம அலுவலகருக்கு கைமாற்றாக வழங்கியுள்ளார். அதுதொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும் சிலர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts