‘கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்’ தொடர்பான கூட்டம் நீராவியடி இலங்கைவேந்தன் கலா மன்றத்தில் இன்று நடைபெற்றது.
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்துகொண்டார்.
இந்த சிவில் கூட்டத்தில் யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள 273 கிராம சேவையாளர் பிரிவினைச் சேர்ந்த 6825 சிவில் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, யாழ். மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பினை பலப்படுத்தி களவு, கொலை, கொள்ளை, இலஞ்ச ஊழல்கள் என்பவற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு குழுவினர் திறமையாக செயற்படுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொகான் டயஸ், யாழ். பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகேரா, 51ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் அபேயரத்ன, யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், இராணுவ அதிகாரிகள், கிராம சேவையாளர்கள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்கள் வடமாகாணத்திலுள்ள சிவில் சமூக பாதுகாப்பு அமைப்புகளில் 22,275 அங்கத்தவர்கள் உள்ளனர் என்று கூறிப்பிட்டார் அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்
சிவில் சமூக பாதுகாப்பு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தேசிய பாதுகாப்பும், கிராம மட்ட குற்றச்செயல்களை தடுப்பதாகும்.
வடமாகாணத்தில் 7 பொலிஸ் பிராந்தியங்களும் 141 பொலிஸ் நிலையங்களும் உள்ளன. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் கீழ் சிவில் சமூக பாதுகாப்பு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
சமூகத்தால் மதிக்கப்பட்டவர்களே சிவில் சமூக அங்கத்தவர்களாகவுள்ளனர். இவ் அமைப்பினால் முதலில் நமக்கிடையில் நம்பிக்கை ஏற்படுகின்றது. இனபேதமின்றி நாம் அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.
மீண்டும் ஒரு பேரழிவினை நாம் விரும்பவில்லை. அந்தவகையில் இந்த அமைப்பினை நாம் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களே பொறுப்புக்கூற வேண்டும். வெளியிடத்தில் உள்ளவர்கள் பொறுப்புக்கூறமுடியாது.
அவரவர் ஊர்களில் இடம்பெறும் ஊழல் தொடர்பான குற்றங்களில் இருந்து கிராம மட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் வரை இந்த சிவில் சமூக பாதுகாப்பு அமைப்பின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நீதி, நிர்வாகம் ஆகிய இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவையென விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் நாம் கலை, பண்பாடு, பாரம்பரியங்கள், கலாசார விழுமியங்களைக் கொண்ட சமூகத்துடன் இணைந்து வாழ்கின்றோம். இந்த அடையாளங்களை சரியான முறையில் வலுவூட்டவும் தவறுகள் இடம்பெறாது பாதுகாக்கவும் சிவில் பாதுகாப்புக்குழுவினர் தங்களது கடமையைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
மதம், மொழி, சுதந்திரம் இவற்றை எமது மக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும். சரியானவற்றை சரியான முறையில் செய்ய வேண்டும். இவற்றுக்காக அனைவரும் ஒன்றிணைந்து நல்லதொரு வழிகாட்டலை வழங்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.