கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தின் பொருட்டு மேற்கொண்டு வரும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை உரிய முறைகளில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக கூறுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குடிசைக் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது உற்பத்தி பொருட்களை உரிய முறையில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கோணாவில் புதிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 64 வயதுடைய தங்கராசா தர்மகுலசிங்கம் என்பவர் 1979ஆம் ஆண்டில் இருந்து தனது வாழ்வாதாரத்துக்காக தும்புத்தடி, விளக்குமாறு என்பவற்றை உற்பத்தி செய்து வரும் அதேநேரம், பண்ணை வேலைகள் மூலம் கைப்பணிப்பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றார்.
இவற்றை உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அவற்றை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவது வரையும் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை கிளிநொச்சி அக்கராயன் கிழக்கு பகுதியில் வசித்து வரும் சுரேந்திரன் லோகினி (வயது 32) என்பவர் தனது குடும்ப வருமானத்துக்காக தையல் வேலைகளுடன் நான்கு பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வகையில் சிறிய சிறிய கைப்பணிப்பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றார். இருந்தபோதும் அவற்றை சந்தைப்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறுகின்றார்.
தனது உற்பத்தி பொருட்களை மாவட்டத்துக்குள் சந்தைப்படுத்தக்கூடிய வசதிகள் இருக்கும் போது, தமக்கு வசதியாக இருக்கும் என்றும் தற்போது அவற்றை கொழும்பு வரைக்கும் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.