கிராமப்புறங்களில் இராணுவ அடாவடித்தனங்கள் தொடர்கின்றது – மாவை

mavaiஎம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் என தமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதேச கிளைகளை அங்குரார்ப்பணம் செய்யும் கூட்டமொன்று பூநகரி பிரதேசத்தின் குமுழமுனையில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேலும் உரையாற்றிய போது,

ஏனெனில் போர் முடிந்த பின்பு வந்த சகல தேர்தல்களிலும் எமது மக்கள் தங்கள் நிலையை ஜனநாயக வழியில் பலமுறை சொன்னபோதும்,இன்றைக்கு இருக்கிற ஜனாதிபதியும் அவர்தம் குடும்பமும் தமிழர் பிரச்சினையை ஒரு பொருட்டாக கருதாமல் எப்படி தமிழரின் ஜனநாகய உரிமைகளையும் பறித்தெடுக்கலாம் என சிந்தித்து இன்றும் வடக்கு கிழக்கிலே ஒரு இராணுவக் கெடுபிடி ஆட்சியை நடாத்தி வருகின்றது.

இப்படி இருக்கையில் நாம் என்ன செய்யமுடியும். நாம் எமக்கு கனிந்து வருகின்ற சர்வதேசசூழலை பற்றிக் கொள்ளாமல் இருக்கமுடியுமா. இன்றைக்கு நாம் கைப்பற்றி இருக்கின்ற வட மாகாணசபையின் அதிகாரங்களை மகிந்தராஜபக்ச அரசாங்கம் பதினெட்டாவது சீர்திருத்தத்தின் மூலம் திவிநெகும என்ற கயமைத்தனமான திட்டங்களை வகுத்து தனது தம்பியான பசில் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டு வந்து செய்திருக்கும் அடாவடித்தனங்களை இந்த மக்களும் உலகமும் அறியும்.

தமக்கு சார்பாக தீர்ப்பை எழுதவில்லை என்பதற்காக இலங்கையின் நீதி அரசரான சிராணி பண்டாரநாயக்காவை தூக்கி எறிந்து தன்னுடைய அநீதி ஆட்சியை உலகத்திற்கு இந்த அரசாங்கம் உணர்த்தி இருக்கின்றது.இன்றைக்கு உலகம் இலங்கை அரசாங்கத்தை மிக உன்னிப்பாக பார்க்கின்றது. உலகத்தின் பெருந்தலைவர்கள் மனித உரிமை காக்கும் உயர்பீட பிரதிநிதிகள் இங்கே தமிழர்களை பார்க்க வருகின்றார்கள்.

எனவே இனி எதையும் யாரும் இங்கே மறைக்க முடியாது.

இன்று தருஸ்மன் விசாரணை அறிக்கையில் தொடங்கிய இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளன. எப்போதும் தர்மத்துக்கு உலகம் தலைசாய்த்துதான் ஆகவேண்டும். அதுதான் இன்று நடக்கின்றது.

நான் இன்றும் பார்த்தேன் செம்மன்குன்று பகுதியில் இராணுவத்தினர் சீருடையோடு மக்கள் குழந்தைகள் வாழுகின்ற குடியிருப்புக்குள் நின்று துப்பாக்கி சூடு நடத்தி பயிற்சி எடுக்கின்றார்கள். இதை நான் கண்ணால் கண்டேன். இங்கே என்ன நடக்கின்றது. கிராமப்புறங்களில் அப்படியே இராணுவ அச்சுறுத்தல் அடாவடித்தனங்கள் தொடர்கின்றது.

இதை நாம் சர்வதேசத்துக்கு நிச்சயம் சொல்வோம்.இங்கே எதற்கு துப்பாக்கி வேட்டுக்குள். இங்கே பல பிரச்சினைகளை கேள்விப்பட்டேன்.

மேலும் பொன்னாவெளியில் உள்ள வளங்களை அதாவது கற்களை நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தோண்டி அதை வேறு வேறு இடங்களுக்கு கொண்டு பண முதலைகளுக்கு தீனி போடுவதற்கு வேலைகள் நடக்கின்றது.

இது தொடர்பாக இந்த மாவட்டத்தை நிர்வகிக்கின்ற அரச அதிகாரிகளும் அசமந்தமாக அல்லது கண்டும்காணாததுமாக இருப்பதாக மக்கள் முறையிடுகின்றார்கள். இங்கு பலவிதமான முறையில் எமது வாழ்வை சீரழிக்க நடவடிக்கைள் அரங்கேறுகின்றன.

அங்கு மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறபெற இராணுவத்திற்கும் பொலிசிற்கும் பணம் சலுகைகள் எங்களுக்கு என்ன நடக்கின்றது. இராணுவத்தில் பெண்களை சேர்க்க கட்டாயபடுத்தல், கருத்தடை செய்வித்தல், இனக்கலப்பு செய்தல் இதுதான் எங்களுக்கு நடக்கின்றது.

எனவே எங்களுக்கான காலம் நிச்சயம் கனியும் அதுவரை ஒற்றுமையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களும் அவசியம். நாம் அதில் முன்னிற்போம். எங்கள் ஒவ்வொரு பிரச்சனையையும் சர்வதேச கவனத்திற்கு கொண்டுவருவோம் என குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுசெயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இலங்கை தமிழரசு கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவரும் பளை பிரதேச சபையின் உறுப்பினருமான சுரேன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts