கிராமத்துடன் கலந்துரையாடல்’ என்ற வேலைத்திட்டத்தினூடாக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைத்த அபிவிருத்தி திட்டத்தை மேலும் திறம்பட கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டம் ஆரம்பம்

‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மாகாண மட்டத்தில் நடத்தப்படும் கூட்டம் (2020.12.14) தென் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் என கடந்த 27ம் திகதி முற்பகல் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருக்கிடையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளிப்படுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள், 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தனி நபரொருவருடைய வரவு செலவுத்திட்டமல்ல. அரச மற்றும் தனியார் துறைகள், சமூக அமைப்புகளுடன் நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு நாட்டின் அபிவிருத்தி மற்றும் எதிர்காலம் தொடர்பில் பல சரியான முடிவுகள் எடுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் எனத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள்,

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். 2021 வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ என்ற வேலைத்திட்டத்தினூடாக மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம் கடந்த 70 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட உண்மையான மக்கள் மயப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.

கிராமத்தின் தேவைகளை பிரதேச மட்டத்தில் முன்வைத்து, பிரதேச அபிவிருத்தி குழுவின் அனுமதியுடன் அமைச்சுக்களின் ஊடாக கொண்டுவரப்படும் முறையான நடைமுறையை வகுத்து, அதனை ஆவணப்படுத்தி, சமூகமயமாக்கும் அவசியம் காணப்படுவதால், அக்காரியத்தை தாமதமின்றி மேற்கொண்டு ஜனாதிபதி செயலணி டிசம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மாகாண மட்டத்தில் நடத்தும் கூட்டங்களில் அதிகாரிகள், அரசியல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதற்கு எதிர்பார்ப்பதனால் அந்த நடைமுறைகளை உடனடியாக தயாரித்து ஜனாதிபதி செயலணியில் முன்வைக்குமாறு இதன்போது திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிலர் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று எண்ணினர். கடந்த அரசாங்கம் பொருளாதாரத்தை அழித்தார்கள் என்று கூறியபோதும் இந்தளவிற்கு அழித்திருப்பார்கள் என்று நாம் எண்ணவில்லை. அதேபோன்றே கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று சில அரசியல்வாதிகள் எண்ணினர். 2021ஆம் ஆண்டே எமது பொருளாதாரம் எத்திசையை நோக்கி பயணிக்கும் என்று தீர்மானிக்கும். அந்தவொரு அமைச்சிற்கும் கூடுதல் குறைவாக பணிகள் ஒதுக்கப்படவில்லை. உற்பத்தி செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைச்சுகளுக்கு நாம் முன்னுரிமை வழங்குவோம். இராஜாங்க அமைச்சுகள் இதுவரை நான்கு பிரிவுகளாக பிரிந்து கிராம மட்டத்தில் செயற்படுகின்றன.

இதுதான் எமது முதலாவது வரவு செலவுத் திட்டம். ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் எமக்கு இதற்கு முன்னர் வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளமையால் மக்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட வேண்டும்.

நாம் ஆற்றும் சேவைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. முழுமையான ஒரு தவறான பிரதிபலிப்பே பொதுமக்களுக்கு காட்டப்படடுகின்றது. சுற்றாடலுக்கு சாதகமான ஒரு விடயத்தை மேற்கொண்டாலும் அவர்கள் நாம் சுற்றாடலை மாசடைய செய்வதாகக் கூறுகின்றனர். இந்த நிலைமையை நாம் மாற்ற வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டங்கள் தொடர்பில் மக்கள் அறிந்தில்லை. எனவே அவர்களை விழிப்பூட்டுவது அவசியம்.

வெளிநாட்டு கடன் மற்றும் நன்கொடை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த அரசாங்கம் நிறைய கடன் பெற்றது. அதனால் தரவு அறிக்கைகளில் நாம் பெரிதும் பின்னோக்கி தள்ளப்பட்டோம். நேரடி வெளிநாட்டு முதலீடுகளை எமது நாட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் என்ற ரீதியில் அரசியல் ஸ்திரத்தன்மையொன்று எமக்கு உள்ளது. அந்நிய செலாவணியை நாம் விட்டுவிடக் கூடாது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஆண்டளவில் சுற்றுலாத் துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு நடடிக்கை எடுப்போம். வெளிநாட்டு சுற்றுலா துறையில் முதலீட்டு வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts