கொக்குத்தொடுவாய் பகுதியில் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இராணுவ தரப்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து சென்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் தெரிவித்தார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் முல்லைத்தீவில் கிராம அலுவலர்கள் இணைத்து ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் இந்த சம்பவத்தை கண்டித்து வடமாகாண சபையில் நேற்றய தினம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்றை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.