சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் நீருடன் கழிவு எண்ணெய் கலந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது அதில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இதன்போது அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
இன்று தண்ணீர்ப் பிரச்சினை என்பது ஒரு சர்வதேசப் பிரச்சனையாக மாறிவிட்டது. அந்தப் பிரச்சினை எமது வடக்கு மாகாணத்தையும் விட்டுவைக்கவில்லை.
இன்றைக்கு எமது பெரும் குளங்களிலெல்லாம் இறங்கி எமது இளைஞர்கள் கிரிக்கட் விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது. அந்தளவிற்கு தண்ணீர் இல்லாத மிகக் கடுமையான வறட்சி நிலவுவதால் மக்கள் தண்ணீருக்காக மிகவும் அல்லல்படும் நிலைமை இருக்கும் நிலைமை ஒருபுறம் இருக்கிறது என்றால், இன்னொருபுறம் இருக்கும் நீரைக்கூட பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கியமான நிலையும் காணப்படுகிறது.
சுன்னாகம் பிரதேசத்தில் மின்சார சபையின் மோசமான செயற்பாட்டின் காரணமாக, அவர்களால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமப்பகுதிகளின் நன்னீர்க்கிணறுகள் மிக மோசமாக மாசடைந்துள்ளன.
அப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் குடிக்கவோ, குளிக்கவோ தண்ணீர் அள்ளும் போது நன்னீருடன் கழிவு எண்ணெய் கலந்து வருகின்றது. இதனால் அந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாதுள்ளது. இம்மாதிரியான பிரச்சினைகள் தென்னிலங்கையில் ஏற்பட்டபோது மின்சக்தி அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் குடிநீர் விநியோக அமைச்சு என்பன இணைந்து உடனடியாகவே அப்பிரச்சினைகளை தீர்த்து வைத்தமையை நாம் கண்டுள்ளோம்.
அனால் இது தமிழர் பிரதேசம் என்கின்ற ஒரே காரணத்துக்காக மட்டும் சுன்னாகம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகிறது. தென்பகுதிகளில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் உடனடியாகவே நடவடிக்கை மேற்கொள்ளும் அரசாங்கம் மற்றும் கட்சிகள் இங்கு நிலவும் பிரச்சினை குறித்து அரசாங்கமோ, அரசுடன் ஒட்டியிருக்கும் கட்சிகளோ அசமந்தப்போக்கினையே கடைப்பிடித்து வருகின்றன.
இந்தப்புறக்கணிப்பினைக்கூட எம்மக்கள் மீதான இனஅழிப்பின் ஒரு வடிவமாகவே நாங்கள் நோக்குகின்றோம். நன்னீர் வளமிக்க பிரதேசமான அப்பகுதியின் மக்கள் ஒரு மிக மோசமான அழிவுக்குத் தள்ளப்படப் போகிறார்கள் என்பது தான் எமது அச்சமாக இருக்கின்றது.
இதை நாங்கள் அமைதியாகப்பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இப்பிரச்சனையின் தீவிரம் கருதி உடனடியாகவே முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசுடன் பேசி, நேரடியாகச்சந்தித்து இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணாது விட்டால் மிகப்பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
அந்த மக்களை சந்தித்தபோது அவர்கள் எம்மடம் இரு கோரிக்கைகளை முன்வைத்தனர். எதிர்காலத்தில் அப்பிரதேசத்தின் கிணறுகளில் கழிவுஎண்ணெய் சேராமல் தடுக்க வேண்டும். மற்றது தற்போது கலந்துள்ள கழிவு எண்ணெய்யை சுத்திகரித்து மீண்டும் பழையபடி சுத்தமான தண்ணீராக மாற்றி வழங்கவேண்டும். என்பதே இந்த இருகோரிக்கைகளையும் உடனடியாக மாகாணசபை கருத்திலெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபையினால் பவுஸர்கள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டாலும் மிகப்பரந்த அளவில் மக்கள் பாதிக்கப்பட்டதனால், மக்களின் சகல குடிநீர் வசதிகளையும் பூரணமாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் வட மாகாண சபை பவுஸர்களை வலி.தெற்கு பிரதேச சபைக்கு வழங்கி உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனக்குறிப்பிட்டார்.