முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவர் தங்கியிருந்த வீட்டிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஆவணங்கள் அடங்கிய 19 கோணிப் பைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பைகளில் பயில்கள் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹோரண தெரிவித்துள்ளார்.
மினுவன்கொட – வடினாபஹ பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் தி.மு.ஜயரத்னவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும், குருப்பு ஆராச்சிலாகே தர்மசேன என்பவர் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த வீட்டில் உள்ள பாழடைந்த கிணற்றில் சந்தேகத்திற்கிடமான கோணிப் பைகள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த கோணிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மினுவான்கொட பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, இது குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.