சினிமாத்துறையில் எப்போதுமே புதிய முயற்சிகளையும், புதிய விஞ்ஞான வளர்ச்சிகளையும் வரவேற்று ஆதரிப்பவர் கமல்ஹாசன். இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விஸ்வரூபம் AURO 3D என்ற புதிய ஒலியமைப்பில் உருவாகிவருகிறது. மேலும் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச் சேவை மூலம் ஒளிபரப்ப முயற்சி நடக்கிறது. படம் வெளியாகும் அதே நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர்.
கமலின் இந்த புதிய முயற்சியால் திரையரங்கு உரிமையாளார்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஆலோசித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் டி.டி.எச் மூலம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கெனவே, விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கிறார் கமல் என்று இஸ்லாமியர்கள் மத்தியில் விஸ்வரூபம் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும், ஏளனம் செய்வதும், கண்டனம் செய்வதும் உலக வழக்கம். இதேபோல்தான் ராஜ்கமல் நிறுவனத்தில் டி.டி.எச். முயற்சியையும் புரியாமல் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்ற எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன.
இதற்கு மாற்றாக சினிமாத்துறையில் பெரும்பான்மையினர் இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி. தமிழ் சினிமாவை, ஏன் உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி என்று பாராட்டுகின்றனர். இது சந்தோசமான செய்தி. ‘டி.டி.எச்.’ற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபார யுக்தி.
ஒரு சிலர் மட்டும் இது சினிமா தொழிலை சீரழிக்கும் என்று ஆவேசம் கொள்கின்றனர்.
டி.டி.எச். என்பது என்ன? எல்லோர் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி படைத்தவர்கள் அதிக பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சனல்களையும், சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
சினிமா திரையரங்குக்கு செல்ல மறுக்கும் வசதியான கூட்டம், சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த டி.டி.எச்.. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளியை கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும், நான் எடுத்த சினிமா படங்களும் சான்று. விஸ்வரூபம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது படத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்க பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.
முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டை குறைத்துக் கொண்டால் 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.
ஓடியோ சி.டி வெளியிட்ட ஒரே நாளில் இந்திய அளவில் அதிகம் விற்பனையாகி உள்ளது. இன்னும் சில தினங்களில் விஸ்வரூபம் சி.டி. விற்பனையில் முதல் இடமாக இருக்கும் என வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.
டி.டி.எச்.-ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும்போது படம் டி.டி.எச். கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம்.
தியேட்டர் கட்டணத்தைப்போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோசம் தவிர, சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாகக் கிடைக்காது.
டி.டி.எச். வசதி தமிழக மக்கள் தொகையில் 3 சதவீதம் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. இதில் நாங்கள் 1 1/2 சதவீதம் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு.
100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம். 7 1/2 கோடியில் ஒரு சதவீதம் பேர் படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50 சதவீதத்தை கள்ள டி.வி.டி. வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள டி.வி.டி. காரர்களுடன் கூட்டுச்சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டுவிட்டு நேர்மையான வியாபாராத்தை தடுப்பது கண்டிக்கத்தக்கது.
திருடனுக்கு 50 சதவீதம் கொடுத்தாலும் கொடுப்பேன். உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம். இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.
பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் கலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா தியேட்டர் அனுபவத்திற்கும்.
முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர், என்று கூறியுள்ளார்.
-மூலம் நக்கீரன்