காவல்துறை தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி!!

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற வாகனத்தை காவலர் ஒருவர் தாக்கியதில் அந்த வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்திக் கலைத்தது.

திருவெறும்பூர் பகுதியில் கணேச ரவுண்டானா என்ற இடத்தில் நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் 3 மாத கர்ப்பிணியான தன் மனைவி உஷாவுடன் வந்தார்.

அவர் தலைக்கவசம் அணியாமல் வந்ததால், வாகனத்தை நிறுத்தும்படி காவலர்கள் கூறினர். ஆனால், அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.

இதையடுத்து அங்கிருந்த காமராஜ் என்ற போலீஸ் அதிகாரி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அவர்களைத் துரத்திச் சென்று சிறிது தூரத்தில் எட்டிப்பிடித்தார். பிறகு தன்னுடைய வாகனத்தில் இருந்தபடி, ராஜாவின் வாகனத்தை உதைத்தாக சொல்லப்படுகிறது.

இதில் கீழே விழுந்த உஷாவும் ராஜாவும் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உஷா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ராஜா சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்தத் தகவலை அறிந்த பொதுமக்கள் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் குவிய ஆரம்பித்தனர். போலீஸ் அதிகாரி காமராஜை கைதுசெய்ய வேண்டுமென அவர்கள் கோரினர். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் பலன் ஏதும் ஏற்படவில்லை.

இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் குவிந்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களில் சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசியெறிந்ததாகவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த வாகனங்களைத் தாக்கியதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

இதையடுத்து ஆயுதப்படை காவலர்கள் வரவழைக்கப்பட்டு, தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. இதில் பல பொதுமக்களுக்கு மண்டை உடைந்து, சிதறி ஓடிய காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாயின.

இதற்குப் பிறகு ஊடகங்களில் பேசிய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், “சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுவிட்டார். வாகனங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Posts