யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பின்பு உள் நுழைய முயன்ற மூவரை அனுமதிக்க மறுத்த காவலாளியை தாக்கி உள்நுழைந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை பார்வையிடுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நால்வர் இரவு 10 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது பார்வையிடும் நேரம் கடந்த நிலையிலும் தாமதித்து அனுமதித்தமையினால் ஒருவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என வைத்தியசாலை வீதியில் உள்ள பிரதான வாசல் கதவில் நின்ற காவலாளிகள் தெரிவித்து ஒருவரை மட்டும் அனுமதித்துள்ளனர். இருப்பினும் நால்வரையும் அனுமதிக்குமாறு தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் மூவர் திரும்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு திரும்பிச் சென்ற மூவரும் பலாலி வீதியில் உள்ள வைத்தியர்களின் பாவனை கதவின் ஊடாக உட்புக முயன்றுள்ளனர். அந்த வாசல் கதவில் ஒரேயொரு காவலாளியே கடமையில் நின்றபோதும் அவர் உட்செல்ல அனுமதிக்க மறுத்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த இளைஞர்கள் காவலாளியை கொட்டனால் தலையில் தாக்கிவிட்டு வைத்தியசாலையின் உள்ளே ஓடிச் சென்றுள்ளனர். இதனால் தலையில் படுகாயமடைந்த காவலாளி உடனடியாக வைத்தியசாலை விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் இவ்வாறு காவலாளியை தாக்கி உட்புகுந்தவர்கள் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து பொலிஸார் தேடுதலில் ஈடுபட்ட சமயம் காவலாளியைத் தாக்கி உட்புகுந்தவர்களில் ஒருவரும் திருட்டுத் தனமாக பாதுகாப்புச் சுவர் ஏறிக் குதித்து உட்புகுந்து ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.