‘காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே டக்ளஸ் மீது குற்றச்சாட்டு’

daklasஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், சம்மேளனத்தினை வழிநடத்தும் சிலரின் அரசியல் உள்நோக்கத்தினையும் கொண்டுள்ளதென யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களான ஷெய்க் ஏ.எஸ்.சுபியான் மற்றும் சரபுல் அனாம் ஆகியோர் கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதய சுத்தியுடன் செயற்படுவதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் முடிவே தவிர அது யாழ். முஸ்லீம் மக்களின் தீர்மானம் அல்ல என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதேவேளை, 1990ஆம் ஆண்டு முஸ்லீம் மக்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்டதை முதன் முதலாக கண்டித்த ஒரேயொரு அரசியல் பிரமுகர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.

அந்தவகையில், 1994ஆம் ஆண்டு முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்திற்கு வந்து மீளக் குடியேறுமாறும் தேவையான பாதுகாப்பினையும் வசதிகளையும் செய்து தருவதாக முதலில் அழைப்பு விடுத்தவரும் அவரே!

அத்துடன், யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் அகதி முகாம்களில் இருந்த போது இம்மக்களுக்கு கல்வி ஊக்குவிப்பு புலமைப்பரிசில்கள் மற்றும் தொழில் முயற்சிக்கான வாழ்வாதார உதவிகள், மகாம்கள் புனரமைப்பதற்கான உதவிகள், ஒவ்வொரு முகாம்களிலும் முன்பள்ளிகள் எனப் பல்வேறு உதவிகளை செய்ததுடன், புத்தளத்தில் சோல்டன் முகாம் தீப்பற்றி எரிந்த போது, முகாமில் வாழ்ந்த 165 குடும்பங்களுக்கு தமது சொந்த செலவில் புத்தளம் தில்லையடியில் மேட்டுக் காணியைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன்பின்னர், யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த போது மீண்டும் முஸ்லீம் மக்கள் தங்கள் சொந்த இடத்தில் குடியேறிய நிலையில், ஆலோசனைகள், வழிகாட்டுதல் அடிப்படையில், இன்றுவரை பல்வேறு உட்கட்டுமான வேலைகள் முஸ்லீம் வட்டாரத்தில் இடம்பெற்று வருகின்றது.

ஒஸ்மானியாக் கல்லூரியின் அபிவிருத்திகள், வீதி அபிவிருத்தி, வீதி மின்சாரம், குடிதண்ணீர், வடிகால் திருத்தம், வாழ்வாதாரத்திற்கான முயற்சிகள் என்று வடக்கின் வசந்த திட்டத்தின் கீழ் என்றிப், நெல்சிப், புறநெகும, மீள்எழுச்சித்திட்டம் எனப் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற திட்டம் திட்டமிடப்பட்ட முறையில் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் இதனை அநுபவமின்றியும் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் அரசியல் உள்நோக்கத்துடன் யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மக்களை பிழையாக வழிநடத்தி ஆரம்பத்திலேயே குழப்பினார்கள். புத்தளம் மற்றும் ஏனைய இடங்களில் இருந்து முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்திற்கு பஸ்களில் அழைத்து வந்த காலத்தில் இருந்து இன்று வரை முஸ்லீம் மக்கள் பல அசௌகரியங்களை அநுபவித்து வருகின்றார்கள்.

இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் என்றால் என்ன, வேறு நிறுவனத்தின் வீட்டுதிட்டமாக இருந்தாலும் என்ன அவைகள் சில நியதிகள் வரையறைகள் கொண்டதாகவே இருக்கும். அதற்கு தகுதியானவர்கள் வீட்டுத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள்.

இது போன்றே அரசாங்கத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நடைமுறைகளும் இருந்து வருகின்றன. இவ்விடயத்தில் அமைச்சரோ அரசாங்க அதிகாரிகளோ குற்றம் சுமத்தப்படுவதற்குரியவர்கள் அல்ல. இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

யாழ். முஸ்லிம்களை அமைச்சர் டக்ளஸ் புறக்கணித்துவிட்டார்?

Related Posts