இலங்கையில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தற்காலிகமான இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இன்று காலை நாடு திரும்பிய நிலையிலேயே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் சட்டவிரோதமாக கால் நடைகளை கடத்திச் செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் பாற்பண்ணைக் கைத்தொழில்துறைக்கும் விவசாயத்தேவைகளுக்கும் பாரியதாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கால்நடைகளை ஏற்றிச்செல்வது தொடர்பில் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்கும்வரை அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தற்பொழுது கால்நடைகளை ஏற்றிச்செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளர்களினூடாக வழங்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியின் குறித்த உத்தரவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.