காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதம்

கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.

உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியதுடன் பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.

அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்றுக்காலை வருகைதந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் கழிவுகளை அகற்றிவிட்டு பந்தலை மீண்டும் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் காரணமற்ற கைதுகளை தடுத்து வைத்தலை கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகின்றது.

இவ் உண்ணவிரதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதம் மாலை 4.00 மணிவரை நடைபெறும் என தமிழ் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

21_12_2012_03

21_12_2012_01

21_12_2012_04

Related Posts