‘காலா’ படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீண் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா என்ற கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நான், நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து பேசி உள்ளேன்.

கடந்த 1996-ம் ஆண்டில் சென்னை பாம்குரோவ் ஓட்டலில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மூலமாக கரிகாலன், உடன்பிறவா தங்கச்சி ஆகிய படத்தலைப்புகளை வெளியிட்டேன்.

கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் எனது உருவாக்கம் ஆகும். கரிகாலன் திரைக்கதையை பல தயாரிப்பாளர்களிடமும் கூறி உள்ளேன்.

என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து காலா என்ற கரிகாலன் என்ற படத்தை எடுத்து வருகின்றனர்.

எனவே, கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் ஆகியோர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி தமிழரசி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

பின்னர், விசாரணையை 15-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Posts