ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து மிடுக்காக நடந்து சென்று மக்களிடம் குறைகள் கேட்பது போன்றும், மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து குறுகலான தெருக்களில் பயணித்து தமிழர்களுக்கு உதவுவது போன்றும் காட்சிகளை படமாக்குகின்றனர்.
கதாநாயகியாக வரும் இந்தி நடிகை ஹூமா குரேஷி முஸ்லிம் பெண்ணாக ஷெரினா என்ற பெயரில் நடிக்கிறார். படப்பிடிப்பை பலர் செல்போனில் படம் பிடித்து இணையதளங்களில் பரப்பி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்த அறிமுக பாடலையும் பதிவு செய்து வெளியிட்டு விட்டனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் படப்பிடிப்பை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை நிறுத்தியுள்ளனர். அவர்கள் ரசிகர்கள் செல்போனில் படம்பிடிப்பதை தடுத்து வருகிறார்கள். 40 நாட்கள் மும்பையில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடர உள்ளனர். இதற்காக பொழுது போக்கு பூங்காவில் தாராவி பகுதியை அரங்காக அமைத்து உள்ளனர்.
இந்த நிலையில் ‘காலா’ படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி சில காட்சிகளில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது. காலா படப்பிடிப்பு தொடங்கியதும் ரஜினிகாந்த் ஜீப்பில் அமர்ந்து இருப்பது போன்ற முதல் தோற்ற படத்தை வெளியிட்டனர். அந்த ஜீப்பின் நம்பர் பிளேட்டில் ‘பி.ஆர்.1956’ என்ற எண் இருந்தது. டாக்டர் அம்பேத்கர் 1956ம் ஆண்டில்தான் மரணம் அடைந்தார்.
எனவே அம்பேத்கர் வாழ்க்கை பற்றிய சில காட்சிகள் ‘காலா’ படத்தில் இடம் பெற இருப்பதாகவும், அவரை பின்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் உதவுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் அம்பேத்கர் வேடத்தில் நடிக்க மம்முட்டியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
மம்முட்டி 2000ம் ஆண்டு ஆங்கிலத்திலும், 9 பிராந்திய மொழிகளிலும் வெளியான அம்பேத்கர் வாழ்க்கை கதை படத்தில் அம்பேத்கர் வேடத்தில் நடித்து இருந்தார். இதில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. ரஜினிகாந்தும், மம்முட்டியும் ஏற்கனவே ‘தளபதி’ படத்தில் இணைந்து நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.