காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனைக்கு வைத்திருந்த ஹோட்டல் முகாமையாளருக்கு நீதிவானால் 4 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டுள்ள குடிதண்ணீர்ப் போத்தல்களை அழிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை மதிப்புறுத்தும் நிகழ்வு யாழ்ப்பாண நகர் ஆசீர்வாதம் வீதியிலுள்ள பிரபல்யமான விடுதி மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றது. வங்கி ஒன்றால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பெற்றோர் உட்பட 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காலாவதியான குடிதண்ணீர்ப் போத்தல்கள் வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்ஜீவனின் கவனத்துக்குத் தெரியப்படுத்தியமை அடுத்து அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்ட பரிசோதகர் அங்கிருந்த திகதி காலாவதியான 40 போத்தல்களைக் கைப்பற்றினார்.
இதையடுத்து விடுதி முகாமையாளருக்கு எதிராக இன்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முகாமையாளர் குற்றத்தை ஏற்றுக் கொண்டமையை அடுத்து அவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து கைப்பற்றப்பட்ட தண்ணீர்ப் போத்தல்களையும் அழிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.