காலத்தின் கட்டாயம் ! கூட்டமைப்பு பதியப்படுமா?

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் ஆட்சியைக்குறிவைக்கும் அரசியல் கூட்டமைப்புக்கள் உள்ளன .அவை நிரந்தரமானவையல்ல.தமது நலன்களை அடிப்படையாக வைத்து ஆட்சியில் பங்கெடுக்கவோ அல்லது தமது அரசியல் எதிர்காலத்தை வளப்படுத்தவே முயற்சித்து வருகின்றன. அந்தவகையில் தமிழ் தேசயிக்கூட்டமைப்பும் விதிவிலக்கல்ல. கொள்கைப்பிடிப்புள்ள முற்றிலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய கட்சிஅமைப்பு கட்டியமைக்கப்படவேண்டும் என்பதே இன்று பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எந்த ஒரு நிரந்தரமான கொள்கைகளையும் கொண்டிராத ஒரு குழு. முதலில் ஒரு கட்சி அமைப்புக்கு அவர்கள் வரவேண்டும் . அதன் பெயர் கூட்டமைப்பாக இருந்தால் அதற்கு நிரந்தரமான கொள்கைத்திட்டங்கள் இருக்கவேண்டும். மக்களுக்கு பதில்சொல்லக்கூடிய சிறந்த கட்சி யாப்பு அவர்களுக்கு தேவை!

ஒவ்வொரு பங்காளிக்கட்சியும் தமது கட்சிகளையும் வளப்படுத்தக்கூடிய நிலை இருக்கக்கூடாது இது நிறுவனத்தின் பாதையினை ஒருநிலையில் கட்டாயம் சீர்குலைக்கும். இதயசுத்தி இருக்காது. ஒன்றுபட முடியாது என்றால் விலகி ஒரு புதிய நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்சியை உருவாக்கவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரே உண்மையில் மாயையானது இன்று யாரும் அதன் தலைவர் என்று கூறமுடியும் சட்டச்சிக்கல் எதுவும் இல்லை.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என தேர்தல் திணைக்களத்தில் பதிவு இல்லை பத்திரிகை செய்திகள் அறிக்கைகள் மாத்திரமே இதனை கூறி வருகின்றன இன்றுவரை தமிழரசுக்கட்சிதான் தமிழ் கூட்டமைப்பாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. வாக்குச்சீட்டில் கூட தமிழரசுக்கட்சிதான். வீடுதான் அதன் சின்னம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் என்று ஏதாவது ஆவணம் உண்டா ?இந்த மாயையினை பலர் வில்லங்கமாக மறைக்கின்றனர் இதற்கு முடிவுகட்டப்படவேண்டும்.இல்லாத ஒன்றை கட்சியாக உருவகித்து வரும் நாம் ஒருவகையில் மன நோயாளிகள் தான்.

இங்கு எமது மனதுக்குள் உணர்வு இருந்தாலும் எமக்கான தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அமையமுடியும் இதுதான் சாத்தியமானதும் கூட. இந்நிலையில் வெறுமனே புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் எமக்கு ஒரு முகமும் காட்டும் இந்த கூட்டமைப்பின் பழுத்த கோமாளிகள் முதலில் தமது கொள்கைகளினை விளக்கி தமிழ் தேசிய அரசியல் கட்சியொன்றை பதிவுசெய்யவேண்டும்.

ஒன்றுமில்லாத ஒன்றை வைத்து பூச்சாண்டி காட்டக்கூடாது. தேர்தலுக்குமட்டும் எமது உணர்வுகைளை விலைபேசி எம்மை முட்டாள்களாக்க முடியாது. சங்கரி போன்ற வெளியிலே உள்ள அரசியல்வாதிகளும் இவர்களை விட வித்தியாசமானவர்கள் இல்லை என்பதையும் அத்தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன். வீட்டுச்சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் தாங்கள் புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்கள் என்று கூற விளைவது தான் சுத்த முட்டாள்தனம். காலம் மாறிவிட்டது இனி புதுதாக சிந்திக்கவேண்டும் பழைய பதிப்புக்கு பக்கவாத்தியம் பாட முடியாது.

நாம் எல்லாம் தெரிந்துகொண்டு ஏதோ ஒரு மாயைக்குட்பட்டு ஒன்றின்பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பது தான் சரியாகப்படவில்லை.மாற்றத்தினை உள்வாங்க வேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும் சரிவராவிடில் மாற்று அணிதான் வழி!

எம்மில் பலர் புதிய மாற்றத்திற்கு தயாரற்றவர்களாக தமிழ் தேசிய அரசியலின் பழைய பதிப்பொன்றுக்கு பின் நின்று கூவிக்கொண்டிருக்கின்றோம். அதில் பிழைகள் இருக்கும் தருணங்களில் எல்லாம் விடுவோம் என்று அலட்சியமாக இருந்து வருகின்றோம். புதிய ஒன்றினை தெரிவு செய்ய தயக்கம் காட்டுகின்றோம். தொழில்நுட்பத்தில் மாத்திரம் தான் புதியனவற்றை தேடுகின்றோம்.அந்த நிலை மாற்றவேண்டும்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஆணை கேட்டுகொண்டு வெறும் சூதாட்டமாக நடைபெறும் தேர்தல் அரசியலில் நமது வாக்குரிமை ஜோக்கராக பயன்படுத்தப்படுவதை ஏற்கமுடியாது.சர்வதேசத்திற்கு ஒற்றுமையினைக்காட்டுகிறோம் என்று கூறி பல இறுதிச்சந்தர்ப்பங்களை வழங்கியும் மாற்றம் எதுவும் இல்லை. சாதாரண அபிவிருத்தி மட்டும்தான்.கிழக்கு மாகாணம் சில செய்திகளை சொல்லிவிட்டது. வடக்குமாகாணமும் சொல்லபோகிறது.

தேசியம் வாக்கு சிதறடிப்பு அது இது என்று ஏதேதோ பிதற்றுகின்றோம். மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவும் அவர்களுக்கான தெரிவுகளை போதியளவு வழங்கவும் நமது தமிழர் அரசியல் வளரவில்லை. ஆனால் தென்னிலைங்கையில் நிலமை வேறு. இங்கே அரசுக்கும் தமிழ்த்தேசியம் பேசுவேருக்குமான மாற்று அணி வலுவான நிலையில் இல்லாமையே அதற்கு காரணம். தொடர்ந்து பாராளுமன்ற ஆசனம் என்ற கனவுதான் தமிழ்த்தேசிய சந்தர்ப்பவாத அரசியலில் இருக்கிறது. மக்களுக்கான தீர்வு குறித்து யாரும் சிந்திக்கவில்லை.

மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு கட்டமைப்பு நிஜமாக உள்ளதா? ஒருமுடிவை கலந்து பேசி வாக்கெடுப்பு நடத்தி எடுக்கிறார்களா? அது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் குரலாக இருக்கிறதா? புள்ளிவிபரங்களை எடுத்து நோ்க்கின் தேர்தலை புறக்கணிப்போர் வாக்களிப்போர் வாக்களித்தவர்களில் எத்தனைபேர் கொள்கைக்கு எத்தனைபேர் கட்சிக்கு எத்தனைபேர் சின்னத்துக்கு எத்தனைபேர் எழுந்தமானமாக வாக்களித்தார்கள் என்றால் அரச அரச சார்பற்ற தமிழ் கட்சிகள் எதுவும் தேறாது! தென்னிலங்கை நிலை முற்றிலும் வேறுபட்டது

முதலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் சீரமைப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும் அதில் சகல தமிழ் தேசியத்ததினை ஆதரிக்கும் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்வேண்டும் அதில் ஒவ்வொரு கட்சியும் குழுக்களும் தமது கொள்கைகளினை வெளிப்படுத்தவேண்டும் அதில் இடைக்கால நிர்வாகம் தெரியப்பட்டு கட்சி யாப்பு உருவாக்கவேண்டும் அதன்படி புதிய நிர்வாகம் தொழிற்படவேண்டும் அது பதிவுசெய்யப்படவேண்டும் தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுகள் எதுவும் சரிவராது. உடனடி புனருத்தானம் இப்போது தேவை! காலம் பொன்னானது

இந்த மாற்றத்திற்கு யாரும் தயாராகாது விடில் உடன்படும் உணர்வுள்ள அரசியல் வாதிகளை ஒன்று சேர்த்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்றே புதிய கட்சியை உருவாக்கவும் முடியும் அதன்போது சில கட்சிகள் ஒதுக்கப்படும் வாய்ப்புக்களும் உள்ளன. அதன்போது சின்னம் பிரச்சனை வரும்! சின்னம் மாற்றினால் பிரித்தறிய முடியாத முட்டாள்களாக மக்களை கருத முடியாது!

நாம் 60 ஆண்டுகளாக அடைய முடியாததை இனியும் அடையலாம் என்று கனவுகாண முடியாது . அதற்கான அரசியல் களநிலை இனி ஒருபோதும் அமையப்போவதில்லை. அதற்கான வெளிக்கள நிலைகளும் இல்லை.அதனின்றும் விலகி ஒரு ஒன்றுபட்ட தீர்வினை அடைவது சாத்தியமே. சரித்திரப்புத்தகத்தில் தான் படையெடுப்புக்கள் வெற்றிகள் பற்றி படித்திருக்கின்றோம் அவற்றின் காலப்பகுதிகள் மிக மிக குறைவு இங்கு நடைபெற்றது நீண்ட காலம். இவ்வளவு பலத்துடன் கட்டுக்கோப்புடன் இருந்த நம்மால் முடியாமல் போன விடயத்தினை இந்த கட்டுக்கோப்பில்லா பழைய அரசியல்வாதிகளைக்கொண்டு அடைந்துவிடலாம் என்று எண்ணுவது தவறு. மீண்டும் ஒரு 60 வருடம் தேவையா?

நாம் அடைய எத்தனிக்கின்ற எமக்கான சமாதான தீர்வுக்கான பாதையில் கட்டுக்கோப்பான ஜனநாயக கட்சி ஒன்றினை உருவாக்கி அதன் கீழ் போகவேண்டிய தேவையில் உள்ளோம். ஒருவருக்கும் சோரம்போகாமல் எந்தவொரு சலுகைக்கும் விலைபோகாமல் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல்கொடுக்கக்கூடிய தாக அக்கட்சி அமையவேண்டும். பழையது வரலாறு அதை மாற்றமுடியாது.புதியதை புதிய வழியில் எழுதவேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் அரசு மற்றும் இங்குவாழும் மக்கள் ஆகிய 3 பிரிவினரும் செல்லும் பாதைகள் வித்தியாசமாக உள்ளன அவை ஒருமுகப்படுத்தப்பட்டு உண்மையில் எது சாத்தியமோ அதனை அடைவதற்கு நாம் பாடுபடவேண்டும். இளைஞர்கள் நேர்மையானவர்கள் எதுவும் உண்மையாக இருக்கவேண்டும் என எண்ணுபவர்கள் அவர்களை உசுப்பேத்தி உணர்ச்சி அரசியலுக்குள் விழுத்தி எம்மை நாம் சிதைக்க கூடாது என வலம்புரி ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து மிகப்பொருத்தமானது. நாமே நமது மக்களின் குரல்களை அவர்களுடைய கருத்து தெரிவிக்கும் உரிமையினை முடிவுகளை எடுக்கும்போது அவர்களின் பங்கினை மறுக்கும் போது இன்னொரு இனத்தின் கட்சியிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

ஒன்று மட்டும் தெரிகிறது ஏன் இவர்கள் இப்படி ? கட்சிப்பதிவுக்கான ஆவணங்களை தயார் செய்ய முடியாத அளவுக்கு தலைவர்கள் இயலாதவர்களா? போன்ற கேள்விகள் பங்காளிகட்சிகள் பலரிடம் எழுந்திருந்தும் கட்சித்தலைமைக்கு கட்டுப்படுகின்றோம் என்று வாழாவிருக்கிறார்கள். பல இடங்களில் இப்படி அனைவரும் வாழவிருந்ததன் விளைவு இப்போது ஒருசிலரின் தனிப்பட்ட முடிவுகளில் கட்சி செல்கிறது

அரசியல்கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்களை தயார் பண்ணமுடியாதவர்கள் எப்படி தீர்வுத்திட்டத்திற்கான ஆவணங்களை தயாரிப்பார்கள் .அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் எங்கே இதைக்கேட்கப்போய் அடுத்தமுறை நமக்கு நமது சிபார்சுகளுக்கு இவர்கள் ஆப்புவைத்து விடுவார்களோ என்ற பயத்தில் தாமுண்டு தம்பாடுண்டு என்று இருக்கின்றனர் இந்த நிலை மாறவேண்டும் மக்களுக்கு பதில்சொல்லக்கூடிய கட்சித்தலைமை வேண்டும் எங்களுக்கு ஒருமுகம் புலம்பெயர்ந்தவருக்கு ஒருமுகம் அரசுக்கு ஒரு முகம் காட்டக்கூடாதல்லவா?

வாக்கு வங்கி பலப்படுத்தல் பற்றி சிந்திப்பதற்கு முதல் அந்த வாக்குகளுக்கான பதிலையும் கூற கட்சி தயாராக இருக்கவேண்டும் வாக்கு வங்கிக்கு மட்டும், பாராளுமன்ற ஆசனங்களுக்கு வலுசேர்க்க மட்டும் மக்கள் இல்லை. தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தேசியப்பட்டியல் வேட்பாளர்கள் நிறுவன கட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்போது தெரிவுசெய்யபட்டருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் இதயசுத்தியுடன் தொழிற்படவில்லை.அவர்களி்ன் தெரிவு கூட்டமைப்பு என்ற உருவகிக்கப்பட்ட அமைப்புக்கு கட்டுப்பட்டு மக்கள் வாக்களித்ததன்பேரில் நடைபெற்றதே தவிர வேறொன்றும் இல்லை

கூட்டமைப்பினை உருவாக்கியபோது பின்புலத்தில் புலிகள் இருந்தனர். அவர்கள் சொன்னதை இவர்கள் கேட்டார்கள் . அப்போதும் சில தவறுகள் இடம்பெற்றிருந்தது அதனாலேயே இராஜதந்திர அரசியல் தோற்றது இப்போதும் தோற்கிறது. எப்போது போராட்டம் மற்றும் அரசியல் மக்கள் மயப்படுத்தப்படுகிறதோ அப்போதுதான் வெல்லும்.

விடுதலைப்புலிகளால் கூட குறுகியகாலத்தில் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிக்க முடிந்திருக்கிறது. பழுத்த அரசியல்வாதிகளால் அது முடியாமல் இருப்பது வியப்பிற்குரியது.மகிந்தவிடம் எப்படி தீர்வுத்திட்டம் இல்லையோ இவர்களிடமும் தீர்வுத்திட்டம் இல்லை.

இந்த வகையில் நாம் எம்மை சுய பரிசீலனை செய்யவேண்டும்.கட்டமைப்புள்ள கட்சி சின்னம் யாப்பு தலைமைச்செயலகம் என வளர்ச்சியடைய வேண்டும். பாரம்பரிய சுதந்திரக்கட்சி வெற்றிலையில் ஒன்றிணைந்து வெற்றி பெறமுடியும் எனில் தமிழரசுகட்சி கூட்டமைப்புக்குள் முழுமையாக இணைந்துகொள்வதில் தடையில்லை.

தவறின் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் தோல்வி என்பன தவிர்க்கப்பட முடியாது. புதிய மாற்றுக் கட்சி ஒன்றுக்கான ஏது நிலையினையும் அதிகரிக்கும்.மக்கள் விழித்துவிட்டனர் வடக்கு தேர்தலை நிறுவன கட்டமைப்புடன் எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தோல்வி தவிர்க்க முடியாது! தேர்தல் மட்டும் அரசியல் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!

-தவா –

Related Posts