வடக்கு மாகாண சபையின் நிதிய நியதிச் சட்டங்கள் தொடர்பில் ஆளுநரினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உப்புச் சப்பில்லாதவை. நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவதை மேலும் கால தாமதப்படுத்துவதற்காகவே அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், நியதிச் சட்டங்களைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநரின் பரிந்துரைகளுடன் நாம் உடன்படுகின்றோம் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை.
கால வீணடிப்பின்றி நியதிச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதில் சொல்லப்பட்ட திருத்தங்கள் முக்கியமானவை அல்ல என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாம் மூன்று நியதிச்சட்ட வரைவுகளை விவாதத்துக்காகச் சமர்ப்பிக்க முன் ஆளுநருக்கு அனுப்பினோம். எந்த ஒரு நிதி சம்பந்தப்பட்ட நியதிச் சட்டமும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 24(1) இன் ஏற்பாடுகளின் படி மாகாண ஆளுநரின் பரிந்துரையுடனேயே சபையில் விவாதத்துக்கு சமர்ப்பிக்கப்படலாம்.
அவற்றுள் ஒன்றை அவர் பரிந்துரை செய்துள்ளார். மற்றொன்றை நிராகரித்துள்ளார். மூன்றாவதை திருத்துமாறு கூறியுள்ளார். பரிந்துரை செய்த நியதிச் சட்டம் தான் முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம். அதனை அங்கீகரிப்பதில் இந்த சபைக்கு எந்தவிதப் பிரச்சினையும் இருக்காது என்று நம்புகின்றேன்.
ஆனால் தாய்ச் சட்டமான நிதி நியதிச்சட்டத்தை அங்கீகரிக்காமல் முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர முடியாது. நிதி நியதிச்சட்டத்தைப் பொறுத்தவரை அதன் வரைவானது கூடுமானவரை 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கிழக்கு மாகாணசபை நிதி நியதிச்சட்டத்தை அடியொற்றியே தயாரிக்கப்பட்டிருந்தது என்று சபைத் தவிசாளர் அவர்கள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.
எனினும் ஆளுநரின் செயலாளர் ஆளுநரின் சில அவதானங்களை எடுத்தியம்பியுள்ளார்.
எமது நிதி நியதிச் சட்டத்தின் தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“வரிகளையும் கட்டணங்களையும் விதிப்பதற்கும் சேகரிப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான ஒரு நியதிச்சட்டம்’ என்று.
கிழக்கு மாகாண ஆளுநரால் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதியன்று சம்மதம் தெரிவிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் 2008 ஆம் ஆண்டின் முதலாவது நிதி நியதிச்சட்டத்தின் தலைப்புவாசகம் அச்சொட்டாக எந்த ஒரு சொல்கூட மாற்றமில்லாமல் இவ்வாறே உள்ளது என்று தெரியவருகின்றது.
அவ்வாறிருக்க எமது நியதிச்சட்ட ஏற்பாடுகளைத் திருத்தி அமைத்து இவ்வாறான நியதிச்சட்டம் கையாளக் கூடிய விடயங்களைத் தெளிவாகக் குறிப்பிடும் படி கோரியுள்ளமை மயக்கத்தைத் தருகின்றது.
அதுமட்டுமல்ல, நிதி நியதிச்சட்டத் தலைப்பை முகப்பு வாசகம் என்றும் முகப்பு வாசகத்தைத் தலைப்பு என்றும் குறிப்பிட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை.
எனினும் இப்பேர்ப்பட்ட சில்லறை மாற்றங்களைச் செய்வதால் சிக்கல்கள் எதுவும் ஏற்படாது என்பதே உண்மை. ஆனால் இவற்றைத் தூக்கிப் பிடிப்பதால் கால விரயம்தான் ஏற்படுகின்றது.
ஆனால் தலைப்புக்கும் முகப்பு வாசகத்திற்கும் இடையில் உள்ள இடத்தில் எவ்வெந்தச் சட்டங்களுக்கு முரணாக இந்த நியதிச்சட்டம் தயாரித்து இருக்கக் கூடும் என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அதில் சான்றியல்க் கட்டளைச் சட்டம், நீதிமன்றங்கள் கட்டளைச் சட்டம் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு செய்ததன் காரணம் சட்டப்படி நாட்டின் சட்டத்துடன் தொடர்புடையதாக அல்லது முரண்பாடுடையதாக ஏதேனும் நியதிச்சட்டத்தின் ஏதேனும் சரத்துக்கள் அமைந்தால் அவற்றைக் குறிப்பிடவேண்டும் என்பதால்.
எந்த வகையில் அவ்வாறான முரண்பாடு இருக்கக் கூடும் என்பதை ஆராயாமல் அவற்றை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. விற்பனைப் புரள்வு வரி தொடர்பாக 1995 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விற்பனைப் புரள்வு வரி (கட்டுப்பாடுகளும் விதிவிலக்குகளும்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய மாற்றங்கள் செய்யக் கோரப்பட்டுள்ளது.
அதாவது வரைவின் பிரிவு 3(1) விற்பனவு வரி விகிதத்தை கட்டளைகள் மூலம் அமைச்சர் நிர்ணயிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மாகாணசபைக்கு அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டாலும் மாகாணசபைச் சட்டத்தின் 24(1) பிரிவுக்கு முரணானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்திலும் கிழக்கு மாகாணசபையின் நிதி நியதிச்சட்டத்தின் பிரிவு 77(1) இன் படி விதிகளைப் பிரகடணப்படுத்தும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். அப்படியிருந்தும் எல்லா வரிவிதிப்புக்களையும் நியதிச்சட்டம் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனத் தெரிவிப்பது நிர்வாக தாமதங்களை ஏற்படுத்துவதுடன் நியதிச்சட்டங்களின் பெருமைகளைக் குறைத்து விடவே செய்யும்.
இவ்வாறான மாற்றங்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ளன. மூன்றாவதாக நாங்கள் சமர்ப்பித்த நியதிச்சட்ட வரைவு வடமாகாண முதலமைச்சரின் நிதியம் பற்றியது. அதை நாங்கள் ஆளுநருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் எதுவும் இருக்கவில்லை. எனினும் நல்லாட்சிக்கான வெளிப்படைத் தன்மையை முன்னிட்டு அதையும் அனுப்பி வைத்தோம்.
அதைத்தான் அவர் நிராகரித்துள்ளார். அது பற்றி அவரின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றைத் எனது செயலாளர் மூலம் அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.