காரசாரமான விவாதங்களுடன் களைகட்டிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்!

யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காகக் காணிகள் எதனையும் வழங்குவதில்லை எனவும், காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டுள்ளன.யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு ஒருமித்த கருத்து வெளியிடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து இதுகுறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்தி ஆராய்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. படையினருக்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் வழங்கப்படக் கூடாது. அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எனவே இந்தக் காணிக சுவீகரிப்பு முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு கருத்து வெளியிட்ட அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மு.சந்திரகுமார், “படையினருக்குக் காணிகள் வழங்கக் கூடாது என்பது எங்களுக்கும் விரும்பம்தான். அதற்காக மீண்டும் ஆயுதப் பேராட்டத்தைச் சந்திக்க இந்த மக்கள் தயாரில்லை.

இந்தக் காணி சுவீகரிப்பை நாங்களும் விரும்பவில்லை. அது அரச காணிகளாக இருக்கட்டும். தனியார் காணிகளாக இருக்கட்டும். ஒரு இணக்கத்தின் அடிப்படையில் அதைத் தடுப்போம்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து படையினருக்குக் காணிகள் வழங்கப்படக் கூடாது என்ற தீர்மானத்தை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். அதனை நான் முன்மொழிகின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “இது தொடர்பில் சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னரே தீர்மானமாக எடுக்க முடியும்.” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட கூட்டம் ஒன்றில் ஆராய்வது என முடிவு செய்யப்பட்டது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் 11 மாதங்களின் பின்னர் நேற்று யாழ்.மாவட்ட செயலர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 11 மாதங்களின் பின்னர் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கள்கிழமை இடம்பெற்றது. இதில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, மாவை சேனாதிராஜா ஆகியோர் மக்களின் மீள்குடியமர்வு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரினர்.

குறிப்பாக வலி.வடக்கில் மக்கள் 20 வருடங்களுக்கு மேல் தமது சொந்த இடங்களில் மீள்குடியமராமல் உள்ளனர். 24 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படாததன் காரணமாக 28 ஆயிரம் பேர் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

மேலும் மாதகல், பொன்னாலை பிரதேசங்களிலும் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டில் பொதுமக்களின் வீடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
மீள்குடியமர்வு முடிந்துவிட்டது என்று பொய் சொல்ல வேண்டாம். உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

மொத்தம் 3 லட்சம் பேர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாது இருக்கின்றனர். அந்த மக்கள் ஏன் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர முடியாது இருக்கின்றனர் என்பதை ஆராய வேண்டும். இராணுவத்தினர் அந்த இடங்களில் இருந்து வெளியேற வேண்டும்.

இராணுவத்தினருக்கு மக்களது காணிகளையும், விடுகளையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் உரிமையைக் கொடுத்தது யார்?. வலி.வடக்கில் இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்படும் என்று சொல்லப்பட்ட பகுதிகளான பளை, வீமன்காமத்தில் இராணுவத்தினர் யாருக்கும் தெரியாமல் காணிகளை ஆக்கிரமிக்கின்றனர்.

நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை இராணுவத்தினர் துப்பாக்கி முனையில் அடாத்தாகத் தம்வசப்படுத்தியுள்ளனர். மக்கள் எந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்களோ, அந்த நிலத்தில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கு வட மாகாண ஆளுநர் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரினார்கள்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர், “உயர் பாதுகாப்பு வலயம் ஏன் உருவானது என்ற வரலாற்றை மீட்டுப் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் பலாலி விமானப் படைத் தளத்தை அண்மித்ததாக 500 மீற்றர் தூரம் மாத்திரமே பாதுகாப்புத் தேவைகளுக்காகக் கைப்பற்றப்பட்டிருந்தது. எஞ்சிய பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்ந்திருந்தனர்.

ஆனால் தமிழ் பயங்கரவாதிகளான புலிகள் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியதாலேயே உயர்பாதுகாப்பு வலயம் உருவானது. தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் கொடுக்கப்படும். இராணுவத்தினருக்குத் தேவையான காணிகள், தேசிய பாதுகாப்புக் கருதி சுவீகரிக்கப்படும்.

அரச காணிகள் அதற்காக எடுக்கப்படும். அதன்பின்னரே மக்களின் மீள்குடியமர்வு தொடர்பில் ஆராயப்படும். நல்லூர் பிரதேச சபைக் காணியை இராணுவம் அடாத்தாகப் பறித்தது தொடர்பில் எதுவும் தெரியாது. அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன்.” என்றார்.

இதனை அடுத்துக் காணி சுவீகரிப்புத் தொடர்பில் காரசாரமான விவாதம் இடம் பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையே இதுதொடர்பில் வாய்த்தர்க்கம் முற்றி உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒரு கட்டத்தில் “இனி உங்கள் நேரம் முடிந்துவிட்டது. இதுகுறித்துப் பேசமுடியாது” என்று அமைச்சர் டக்ளஸ் மாவை சேனாதிராஜாவிடம் கூறினார். இதற்குப் பதிலளித்த மாவை, “நான் பேசுவேன்.

இது மக்களின் பிரச்சினை, அதைப் பேசுவதற்கு எமக்கு உரிமை உண்டு.” என்றார்.
இந்தக் கூட்டத்தில் யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபையின் செயலாளர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவும் சீனாவும் இலங்கை மீது படையெடுத்தா வரப் போகின்றன? பின்னர் எதற்குத் தேசிய பாதுகாப்பு என ஆளுநரிடம் சுரேஷ் கேள்வி

தேசிய பாதுகாப்பு என்று அடிக்கடி கூறுகிறீர்கள். அப் படியானால் இந்தியா அல்லது சீனா இங்கு படையெடுக்கப் போகிறதா?

இப்படி வடமாகாண ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

அங்கு அவர் மேலும் தெரி வித்ததாவது,
காணிகளைச் சுவீகரிப்பது பற்றி இங்கு பேசும் போது அவற்றைத் தேசிய பாதுகாப்புக் கருதி அரசு சுவீகரிக்கும் என்று ஆளுநர் கூறினார்.

போர் முடிந்துவிட்டது. புலிகள் இல்லை என்று உங்கள் அரசுதான் சொல்லியுள்ளது. அப்படியானால் ஏன் இந்த தேசிய பாதுகாப்பு? இந்தியா அல்லது சீனா படையெடுக்கப் போகின்றதா? பின்னர் எதற்கு இந்தத் தேசியப் பாதுகாப்பு? மக்கள் இல்லாத மண்ணில் தேசியப் பாதுகாப்பு ஏன்?

இராணுவத்தினருக்கு கிராமத்துக்குக் கிராமம் காணி வழங்கப்படுமாக இருந்தால் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் பிரச்சினை தோன்றும். மக்கள் தமது வீடுகளுக்குச் செல்லாது நடுத்தெருவில் நிற்கமுடியாது. என்றார்.

அரச அதிகாரிகள் திணறினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சரமாரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது அரச அதிகாரிகளும், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்றுத்திணறினர்.

ஒவ்வொரு திணைக்களங்களின் அரச அதிகாரிகளும், தமது திணைக்களங்களின் கீழான வேலைத் திட்டங்கள் தொடர்பில் விபரித்தனர்.

அவர்கள் விபரித்து முடிந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ஒருவர் மாறி ஒருவர் அரச அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அந்த அரச அதிகாரிகள் பதலளிக்க முடியாது திணறினர்.

அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்குரிய புள்ளி விவரங்கள் இல்லாது அதிகாரிகள் தடுமாறினர்.

Related Posts