காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என வலியுறுத்து!

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது மாணவர்கள் மத்தியில் கொரோனா, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பினால், அவர்களுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை எனவும், அவர்களின் உடல்நிலை மோசமாகிவிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை இல்லை எனவும், மாணவர்களை வீட்டில் வைத்து ஓய்வெடுக்க அனுமதிப்பது சிறந்த வழி எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், பாடசாலையில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் அது பரவக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கிடையே பரவல் மட்டுப்படுத்தப்பட்டாலும், அது தேவையற்ற வகையில் பாடசாலைகளை மூடுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுவர்களுக்கு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் அல்லது அவர்கள் உணவை மறுத்தால் அல்லது அவர்களின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமானது எனவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதும், நெரிசலான இடங்களில் நடமாடுவதைத் தவிர்ப்பதும் மிக மிக முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts