காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருந்தியல் பேராசிரியர் வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் இன்றி, எந்தவித நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளையும் கொடுக்க வேண்டாம்.

கோவிட் நோயை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எந்த விதமான மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள மிகச் சிறந்த தீர்வு தடுப்பூசியேயாகும்.

அத்துடன், மருத்துவ ஆலோசனையின்படி விட்டமின் வகைகளை எடுத்துக் கொள்வதாக இருந்தால், அந்த மருந்துகளை மாத்திரமே நீங்கள் எடுக்க வேண்டும்.

கோவிட் தொற்றுள்ளவர்கள் காய்ச்சல் அல்லது உடல் வலி இருந்தால் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் சிறிய குழந்தைகளுக்கு அவர்களின் எடைக்கு ஏற்ப பரசிட்டமோல் கொடுக்கப்பட வேண்டும்.

இருதய நோய் உள்ளவர்கள் வழமையாக உட்கொள்ளும் எஸ்பிரின் மாத்திரைகளை, கோவிட் நோயாளர்கள் எடுக்கும்போது கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts