சம்பவமொன்றில் காயமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சையளித்தார், இன்னொரு உறுப்பினருக்கு அடைக்கலமளித்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

வட்டக்கச்சியை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், ஏற்கனவே பொலிசாரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பொலிசார் மீதான தாக்குதலில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் அவர் கைதாகியிருந்தார். தற்போது, அவரது மனைவியும் கைதாகியுள்ளார்.
இரகசிய தகவலொன்றையடுத்து, அந்த வீட்டை சோதனையிட பொலிசார் சென்றதாகவும், அதற்கு முன்பாக இரண்டு விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அதிலொருவர் காயமடைந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்றும், அவர் எந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்தார் என்பதை உறுதியாக கூற முடியவில்லையென்றும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.