நடிகை குஷ்பு சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடைசியாக, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘ஆம்பள’ படங்களில் கவுரவ தோற்றங்களில் தலைகாட்டினார். அதன்பிறகு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. சில டைரக் டர்கள் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார்.
தி.மு.க.வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு, அக்கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். போராட்டங்களிலும் கலந்துகொண்டார். இந்த நிலையில், குஷ்புவுக்கு காலில் திடீர் காயம் ஏற்பட்டது.
படிக்கட்டில் இறங்கியபோது கால் இடறி விழுந்து இந்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் குஷ்புவுக்கு சிகிச்சை அளித்தனர். அவருடைய முழங்காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்ததால் குஷ்பு காலில் டாக்டர்கள் கட்டுபோட்டனர். சிகிச்சைக்குப்பிறகு அவர் குணம் அடைந்தார்.
காலில் கட்டுபோடப்பட்ட படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ளார். அதில், “எனது கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. முட்டி நகராமல் இருப்பதற்கான உபகரணம் காலில் பொருத்தப்பட்டு உள்ளது. பெரிய காயம் இல்லை என்றாலும், நான்காவது தடவையாக அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போனிலும், டுவிட்டரிலும் ஏராளமானோர் குஷ்புவை தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர்.