காமெடி கதையில் ஹீரோவாகிறார் அனிருத்?

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்பட சில இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள்.

இவர்களைப்போலவே இசையமைப்பாளர் அனிருத்தும் ஹீரோவாக உருவெடுப்பார் என்று முன்பே கூறப்பட்டது. அவரும் வணக்கம் சென்னை என்ற படத்தில் ஒரு பாடலில் தோன்றி நடனமாடினார். தான் இசையமைத்த சில படங்களில் ஒரு காட்சியிலும் தோன்றி நடித்தார்.

ஆனால் அனிருத் இதோ ஹீரோவாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் பீப் சாங் சர்ச்சையில் சிக்கிய அனிருத், பின்னர் ஹீரோ ஆசையையே மறந்து விட்டார்.

இந்த நேரத்தில் அவரை மீண்டும் ஹீரோவாக்க ஒரு முயற்சி நடக்கிறது. ஜப்பான் என்ற பெயரில் அவரிடம் ஒரு கதையை சொன்ன ஒரு புதுமுக இயக்குனர், நீங்கள்தான் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம்.

காமெடி கலந்த அந்த கதையைக்கேட்ட அனிருத், கதை பிடித்திருக்கிறது. விரைவில் நல்ல பதில் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.

Related Posts