காமன்வெல்த் போட்டிகள் : பொலீசாரால் தடுக்கப்பட்ட இலங்கை சைக்கிள் வீரர்கள்

கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த, இலங்கையின் நான்கு சைக்கிள் ஓட்டும் வீரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

lankan_cyclists_on_motorwa

போட்டிகள் நடைபெறும் நகருக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, அவர்களைத் தடுத்த ஸ்காட்லாந்து காவல்துறையினர், அந்த நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டுவது சட்டவிரோதமானது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மதர்வெல் மற்றும் ஹாமில்டன் நகர்களுக்குச் பிரிந்து செல்லும் அந்த அதிவேக நெடுஞ்சாலை, ஸ்காட்லாந்தில் மிகவும் கூடுதலாக வாகனங்கள், வந்து செல்லும் ஒரு பாதையாகும்.

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் ஓட்டம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ட்ரயத்லான் போட்டிகள் நடைபெறும், ஸ்டாத்க்ளைட் பூங்காவுக்கு அருகில் அந்த நெடுஞ்சாலையின் சந்தி உள்ளது.

இலங்கை வீரர்கள் அந்தப் பகுதியில், சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த காவல்துறையினர் அவர்களுக்கு ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கினர் என்று, ஸ்காட்லாந்து காவல்துறை கூறுகிறது.

அந்த நான்கு வீரர்கள் அந்தப் பாதையில், சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்ததை, இங்கிலாந்தின் ட்ராயத்லான் வீரர், அலிஸ்டர் பிரவுண்லீ படம் பிடித்து அதை தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு மான்செஸ்ட்டர் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்றபோது, கென்யாவைச் சேர்ந்த இரண்டு சைக்கிள் வீரர்கள், இதேபோல் வேறொரு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்தபோதும், போல்டன் நகருக்கு அருகில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Related Posts