தமிழகத்தின் தாரமங்கலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து தமிழக ஊடகமான தினமணி தெரிவித்துள்ளதாவது,
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை வாழ் மக்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியைச் சேர்ந்த ராஜா – ஜெனிதா தம்பதிக்கு நிஷாந்த், நிஷாந்தினி (19) உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.
நிஷாந்த் வேலூரைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். சித்ரா, வேலூரில் தங்கி, அங்குள்ள காலணிகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடன் நிஷாந்தின் தங்கை நிஷாந்தினியும் சென்று பணியாற்றியுள்ளார்.
அப்போது அங்கே மேலாளராகப் பணியாற்றி வந்த சந்திரசேகரன் (27) என்பவருடன் நிஷாந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தாரமங்கலம் பவளத்தானூர் முகாமுக்கு வந்த நிஷாந்தினி இங்குள்ள மற்றொரு இலங்கை அகதி மணிகண்டன் (24) என்பவரைக் காதலித்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதையறிந்த சந்திரசேகரன் வேலூரில் இருந்து, திங்கள்கிழமை நிஷாந்தினி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த நிஷாந்தினியிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் நிஷாந்தினியை கீழே தள்ளிய சந்திரசேகரன் கையில் இருந்த பிளேடைக் கொண்டு, நிஷாந்தினியின் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வலியால் துடித்த நிஷாந்தினியின் சத்தம் கேட்டு, அப் பகுதி மக்கள் வருவதைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஆனால், அங்கிருந்த இளைஞர்கள் சந்திரசேகரனை சுற்றிவளைத்து பிடித்து, தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிஷாந்தினியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்ட சந்திரசேகரனிடம் தாரமங்கலம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிஷாந்தினி தன்னைக் காதலித்துவிட்டு, தற்போது தனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், தகவல் தெரிந்துவந்து கேட்டபோது, சரியாகப் பேசாததால் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஆத்திரத்தில் பிளேடால் அவரின் கழுத்தை அறுத்ததாகவும் சந்திரசேகர் கூறியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.