காதலியை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளை கோவிலடியில் விட்டுச் சென்றதாக கூறி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்ற சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலின் முன்பாக அநாதரவாக மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதாக செவ்வாய்க்கிழமை (25) இரவு கோப்பாய் பொலிஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள்.
இதனையடுத்து, அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் இரவு 9 மணிக்கு அவ்விடத்தில் விடப்பட்டு அதிகாலை 4 மணிக்கு மீண்டும் எடுத்து செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு கூறினார்கள்.
இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவன் புதன்கிழமை (26) கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, பொலிஸார் மீட்டது தனது மோட்டார் சைக்கிள் எனவும், தனது காதலியை இரவில் சந்திக்க செல்வதற்காக மோட்டார் சைக்கிளை கோவிலடியில் விட்டு சென்றதாகவும் பொலிஸாருக்கு கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஆவணங்களை உறுதிப்படுத்திய பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான மாணவனிடம் மோட்டார் சைக்கிளை கையளித்ததுடன், அவ்விடத்தில் விட்டுச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை செய்தும் அனுப்பியுள்ளனர்.