காணி விடுவிப்பை வரவேற்கிறது கூட்டமைப்பு

வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துகென அரசினால் விடுவிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

காணி விடுவிக்கப்பட்டமையை வரவேற்று அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் யாழ். குடாநாட்டுக்கு வருகை தந்து விடுவிக்கப்படாத காணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

அத்துடன் உடனடியாக விடுவிக்கப்படக் கூடிய பகுதிகள் விடுவிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த வேளை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் முதற்கட்டமாக இந்த வருட இறுதிக்குள் ஒரு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்துக்கென அனுமதிக்கப்படுவார் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார்.

அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியமைக்காக ஜனாதிபதிக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, எஞ்சிய பகுதிகளும் கட்டங்கட்டமாகவேனும் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

இதேபோலவே மலரும் இந்த புதிய வருடத்தில் ஆரம்பத்திலேயே எஞ்சியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். – என்றுள்ளது.

Related Posts