காணி விடுவிப்பு தொடர்பில் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றி உரையின் முழு வடிவம்

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, நான் பின்வரும் ஒத்திவைப்புப் பிரேரணயை சமர்ப்பித்து பின்னர் அது தொடர்பாக உரையாற்றுகிறேன்:

“2009 அம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, தனிப்பட்ட பிரசைகளுக்குச் சொந்தமான பொருந்தொகைக் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருந்தமையினால்:

இக்காணிகளுள் பெரும்பாலானவை பாதுகாப்புக் காரணங்களுக்காக குடிமக்களிடமிருந்து இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டன. உதாரணமாக, ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்னர் பலாலி விமானத் தளத்தை பீரங்கித் தாக்குதலிலிருந்து பாதுகாக்குமுகமாக வலிகாமம் வடக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளிலிருந்து குடிமக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயினும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னரும் அதில் ஒரு சிறு பிரிவு மட்டுமே குடிமக்கள் மீள்குடியேற்றத்திற்காக மீள விடுவிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, அதன் பெரும் பகுதி விவசாயம் செய்வதிலும் சுற்றுலா விடுதிகள் நடாத்;துதல் அடங்கலான வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரால் இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்;ளது. அதே நேரம், அவற்றின் ஆரம்பக் குடியிருப்பாளர்கள் நலன்பரி நிலையங்களிலும் அனுசரரணை வழங்கும் குடும்பங்களின் வீடுகளிலும் தங்கி வாழ்ந்து துன்பம் அனுபவிக்கின்றனர்.

வன்னியிலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை பாதுகாப்புப் படையினர் இன்னும் பிடித்து வைத்துள்ளனர். கேப்பாப்புலவில் அண்மையில் வான்படையினரால் ஒரு சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும், அதிகளவு காணிகள் இன்னும் இராணுவத்தின் வசமே உள்ளன.

தம்மை அந்தக் காணிகளில் மீண்டும் குடியேற அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் இக்காணிகளின் முன்னே எதிர்ப்பார்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இது 2015 ஜனவரி சனதிபதித் தேர்தலுக்கு முன்பதாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும.; மக்கள் பொறுமையோடு இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காத்திருந்து இப்போது அரசாங்கம் தனது வாக்குறுதியைக் காப்பாற்றி இக்காணிகளை விடுவிக்கவேண்டுமென நியாயமாகவே கோருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக மிகத் துரிதமான நடவடிக்கை எடுத்து, மோதல்கள் ஏற்படுவதற்கு முன்னர் குடிமக்கள் வாழ்ந்த, இப்போது பாதுகாப்புப் படையினர் பிடித்து வைத்துள்ள அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறும் அந்த காணிகள் மேலும் தாமதமின்றி அவற்றின் ஆரம்ப குடியிருப்பாளர்களுக்கு மீள வழங்கப்படவேண்டும் என்றும் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.”

அண்மையில் இந்த விடயம் தொடர்பாக நான் மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு மார்ச் மாதம் 3 ஆம் திகதி கடிதம் எழுதியுள்ளேன். அது உண்மையில் யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கிலும் முல்லைத் தீவு மாவட்டம் கேப்பாபுலவுவிலும் உள்ள காணிகள் தொடர்பானதாகும். நான் அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டவில்லை. ஆனால், அதனை சபாபீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். இந்தக் கடிதத்தை ஹன்சாட்டில் எனது உரையின் பின்னர் சேர்த்துக்கொள்ள பணிப்புரை விடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
______________________
உரையினிறுதியில் தரப்பட்டுள்ளது.
Produced at end of speech.

வட மாகாணத்தில் நிலவும் இந்தக் காணிப் பிரச்சினை தொடர்பாகவும் பல இடங்களில் பல நாட்களாகவும் பல வாரங்களாகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமும் நாம் காணுகின்ற இந்தக் காணிப் பிரச்சினை பற்றிய மக்களின் மனப்பாங்கு தொடர்பாகவும் நான் இப்போது சில கருத்துகள் கூற விரும்புகிறேன்.

மக்கள் தமது காணிகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதால், தமது காணிகளில் வாழ விரும்புவதால், தமது காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதால் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். வட மாகாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்கின்ற மக்களுக்கு ஆதரவாக நாட்டின் ஏனைய பகுதிகளில், ஏனைய இடங்களில் வாழுகின்ற ஆட்களினால் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் புத்த பிக்குகள் அடங்கலாக சிலர் வடக்கில் ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்களுடன் இணைந்துள்ளதோடு, அவர்கள் இக்காணிகள் தொடர்ச்சியாக ஆயுதப்; படையினரின் வசம் இருப்பதைத் தாம் அனுமதிக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பள்ளிவாசலில், வடக்கில் இக்காணிகளில் குடியிருப்பதற்கு உரித்துடைய ஆட்களுக்கு அவை விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் பல ஆட்களினால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இக்கோரிக்கைக்கு ஆதரவாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் வாழும் மக்களினால் விடுக்கப்படும் இக்கோரிக்கை ஒரு நியாயமான கோரிக்கை என்றும் இக்காணிகள் எந்த மக்களுக்கு உரியனவோ, அந்த மக்களுக்கு அவை திரும்ப வழங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கருதுகின்றார்கள் என்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்தக் காணிகள் தமக்குத் திருப்பித் தரப்பட வேண்டுமென்று வடமாகாணத்தில் உள்ள மக்களினால் விடுக்கப்படும் இக் கோரிக்கைக்கு ஆதரவாக சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இவ்வார்ப்பாட்டங்களில் பங்குபற்றி வருகின்றனர்.

இந்த மிகவும் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும், குறிப்பாக வடமாகாணத்திற்கு வெளியே இருக்கும் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகின்றேன்.
ஐயா, இது மாதிரியான ஒரு நிலைமை நாட்டின் தென்பகுதியில் இருக்க முடியுமா என்ற வினாவை நான் எழுப்ப விரும்புகிறேன். குடி மக்களின் காணிகளை ஆயுதப்படையினர் அல்லது அரசாங்கம் அவ்வாறு பிடித்து வைத்திருக்க முடியுமா? அது சகித்துக்கொள்ளத்தான் படுமா? ஏனைய அரசியல் சக்திகள் அவ்வாறு நிகழ்வதை அனுமதிக்குமா? தெற்கில் அத்தகைய காணிகள் ஆயுதப்படையினரால் அல்லது அரசாங்கத்தினால் பிடித்து வைக்கப்பட்டிருக்குமானால், அவர்கள் தலையிட்டு அக்காணிகள் அம்மக்களிடம் திருப்பி வழங்கப்படுவதை உறுதிசெய்திருக்க மாட்டார்களா?

இது எதனைக் காட்டுகின்றது? இந்த விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியதான அதிகாரமும் பலமும் தமிழ் மக்களிடம் இல்லை என்பதை அது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஐயா, அதனால்தான் உண்ணாவிரதமிருந்து மழையினாலும் பனியினாலும் தடைபடாது வெட்டவெளியில் இரவும் பகலும் சுட்டெரிக்கும் வெய்யிலில் தமது குடும்பங்களோடும், தமது பிள்ளைகளோடும் தமது குழந்தைகளோடும் தொடர்ந்து அமர்ந்திருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்கின்றார்கள். தமக்கு இழைக்கப்படும் அநீதியை உலகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்; எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் ; தம்மைத் தாமே வருத்திக் கொள்கிறார்கள். ஐயா, இந்த நிலைமை தொடரக்கூடாது; அது ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
பல வருடங்களுக்கு முன்னரே யுத்தம் முடிவுற்றிருந்தும், ஒரு யுத்த சூழ்நிலையில் அவர்கள் இடம்பெயர்வதற்கு முன்னர் இக் குடிமக்களுக்குச் சொந்தமாகவிருந்த அல்லது அவர்கள் வைத்திருந்த இக்காணிகளைத் தொடர்ந்தும் பிடித்து வைத்திருப்பது சட்டவிரோதமானதாகும் என்பதோடு, இக்காணிகளுக்கான இம்மக்களின் சட்டபூர்வமான உரித்து தெளிவாகவே மறுக்கப்படுகின்றது. இது அவர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளின் ஒரு பெரும் மீறலாகும். தேசிய பாதுகாப்புக் காரணங்களின் அடிப்படையில் தெளிவாக இனங்காணப்பட்ட ஒரு சில வரையறுக்கப்பட்ட அளவு காணியில் இராணுவம் தங்கியிருக்கலாம். எனினும், அவர்கள் அக்காணிகளை விவசாயத்திற்கு, மரக்கறி, பழங்கள் ஏனைய பயிர்கள் வளர்ப்பதற்கு, ஆடம்பர விடுதிகள் மற்றும் உணவகங்கள் நடத்துவதற்கு இக்காணிகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அல்லது அவற்றைத் தமது பொழுதுபோக்கிற்காக கோல்ப் திடல்களுக்காக அல்லது அவர்களது வதிவிடங்களாகப் பயன்படுத்துவதற்கு நிச்சயமாக முடியாது. அவ்வாறு செய்வது இம் மக்களது அடிப்படை மற்றும் மனித உரிமைகளின் ஓர் அப்பட்டமான மீறலாகும். இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்க முடியுமென நான் கருதவில்லை.
உண்மையில், 2015 ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் கூறுவது, மேற்கோள்:

“அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உயர்பாதுகாப்பு வலயங்களின் மீளாய்வைக் கவனத்திலெடுத்தும், காணிகளை சட்டபூர்வ குடிமக்கள் உரிமையாளர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதற்கும் உள்ளுர் மக்கள் தமது வாழ்வாதாரங்களை மீண்டும் தொடங்குவதற்கு உதவுவதற்கும் குடிமக்கள் வாழ்க்கையில் மாமூல் நிலையை மீள ஏற்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப நடவடிக்கைகளை வரவேற்றும்.”

இவ்வாறு தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்படுகிறது. அது மேலும் 10 ஆம் பந்தியில் குறிப்பிடுவதாவது,

“அத்துடன் காணிகளைத் திருப்பி ஒப்படைப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஆரம்ப நடவடிக்கைகளை வரவேற்பதோடு, காணிகளை அவற்றின் சட்டபூர்வ குடிமக்கள் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கும், காணிப் பாவனை மற்றும் உரித்தாண்மை ஆகிய துறைகளில், அதிலும் குறிப்பாக குடிமக்கள் செயற்பாடுகளில் ஈடுபடுவதை முடிவுறுத்துதல் மற்றும் குடிமக்கள் தமது மாமூல் வாழ்க்கையை மீள ஏற்படுத்துதல் ஆகியவற்றில், முன்னே இருக்கும் கணிசமானளவு பணிகளைக் கையாள்வதற்கு மேலும் முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதோடு, இம்முயற்சிகளில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட உள்;ர் மக்களின் முழுமையான பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.”

இது தான் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் 2015, ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவிலியன் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு உதவுமுகமாக காணிகள் திருப்பி ஒப்படைக்கப்படுவதை அவர்கள் வலியுறுத்தினர். அது நடைபெறவில்லை என்பதை நாங்கள் கவலையோடு கூறுகின்றோம்.

ஐயா, 2017, பெப்ரவரி மாதம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் விடுத்த அறிக்கையில் அவர் கூறியதை நான் வாசிக்கின்றேன். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையின் 48ஆம் மற்றும் 49 ஆம் பந்திகளை நான் குறிப்பிடுகின்றேன்.
பந்தி 48இல் அவர் கூறுகிறார், மேற்கோள்:

“இராணுவத்தின் வசமுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தல் என்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத ஒரு அம்சமாகவே உள்ளது. கணிசமான அளவு காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பினும் (அரசாங்க புள்ளிவிபரங்களின் படி 2015 ஒக்டோபர் மாதத்திலிருந்து மேலதிக 2,625 ஏக்கர் தனியார் காணிகளும், 9,288 ஏக்கர் அரச காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன), இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் வரைபடமொன்றும் தெளிவான எல்லைக் குறியீடுகளும் காலவரையறைகளும் கொண்ட காணி விடுவிப்புத் திட்டமொன்று இன்னும் பொதுமக்களுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.”

49 ஆம் பந்தியில் அவர் கூறுகிறார், மேற்கோள்:

“நன்கொடையாளர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவு இருந்தும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆட்களின் மீள்குடியேற்றத்திலான முன்னேற்றம் மந்தமாகவே உள்ளது. இது பகுதியளவில், காணிகளை விடுவிக்கத் தவறியமமையினால் ஏற்பட்டதாகும். 2016 ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி மோதலினால் பாதிக்கப்பட்டு ஏற்பட்ட இடம்பெயர்வுகளுக்கான நிலையான தீர்வுகள் தொடர்பான ஒரு உரிமைகளின் அடிப்படையிலான, விரிவான தேசிய கொள்கையை அமைச்சரவை அங்கீகரித்தது. எனினும், அதன் அமுலாக்கத்திற்கான சவால்கள் நிலவுகின்றன. அரசாங்கம் பிடித்து வைத்திருப்பது அல்லது இரண்டாம்நிலை பிடித்து வைப்புகள் தொடர்பான காணிப் பிணக்குகள் அடங்கலான முக்கிய தடைகள் தீர்க்கப்பட வேண்டும். சிவிலியன் வர்த்தகச் செயற்பாடுகளில் இராணுவம் தொடர்ச்சியாக ஈடுபடுவதனால், பாதிக்கப்பட்ட சமூகங்களில் அதிருப்தி அதிகரித்துள்ளது.”

ஐயா, மனித உரிமைகள் ஆணையாளர்கூட கடந்த மாதம் மனித உரிமைகள் பேரவையில் தான் விடுத்த அறிக்கையில், முற்றிலும் தேவைப்படாத ஒரு அளவிற்கு இராணுவம் காணிகளைப் பிடித்து வைத்திருப்பதன் விளைவாக எழுகின்ற பிரச்சினைகளையும் மக்கள் தமது காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாதிருப்பதற்குக் காரணமாக அமையும் இராணுவத்தின் செயற்பாடுகளையும் மக்கள் தமது காணிகளில் குடியமர்த்தப்படாததையும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது மனித உரிமைகள் ஆணையாளரும் தனது அறிக்கையில் குறிப்பிடுவதற்குப் பொருத்தமானதெனக் கருதிய ஒரு விடயமாகும்.

ஐயா, அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களும் 2017 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் தான் விடுத்த அறிக்கையில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அரச காணிகளைப் பொறுத்தவரை 5,519.98 ஏக்கர் காணியும் 1,383.51 ஏக்கர் காணியுமாக மொத்தம் 6,903.49 ஏக்கர் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். தனியார் காணிகளைப் பொறுத்தவரை 2,090.03 ஏக்கரும் 30.54 ஏக்கருமாக மொத்தம் 2,120.57 ஏக்கர் விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். மனித உரிமைகள் ஆணையாளரினால் தரப்பட்ட புள்ளிவிபரங்களுக்கும் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்குமிடையே பரஸ்பர முரண்பாட்டை நான் காண்கின்றேன். 9,288 ஏக்கர் அரச காணிகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களின் அறிக்கை 6,903.49 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இங்கு கிட்டத்தட்ட ஒரு 3000 ஏக்கர் வித்தியாசம் உண்டு. தனியார் காணிகள் தொடர்பாகவும் ஒரு முரண்பாடு நிலவுகிறது. மனித உரிமைகள் ஆணையாளரது கூற்றுப்படி, 2,625 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களின் கூற்றப்படி, 2,120.57 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

ஐயா, இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் அரச மற்றும் தனியார் காணிகள் விடுவிக்கப்படுவதற்காக அவற்றின் சரியான விஸ்தீரணம் துல்லியமாக இனங்காணப்பட்டு தெளிவான எல்லைகளும் கால வரையறைகளும் கொண்ட திட்டங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும்;போது தான் இத்தகைய முரண்பாடும் ஒவ்வாமையும் தீர்க்கப்பட முடியும். பொது மக்களின் ஒத்துழைப்போடு இந் நடவடிக்கை தொடரவேண்டும். எனவே, கௌரவ வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கூறுவதற்கும் மனித உரிமைகள் ஆணையாளரினால் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்குமிடையே ஒரு முரண்பாடு, ஓர் ஒவ்வாமை நிலவுகிறது என்று நான் கூறுகின்றேன்.
இந்த விடயம் தொடர்பாக, நான் ஒரு சிறு தயார்படுத்தல் வேலைகள் செய்திருக்கின்றேன். விடயமறிந்தவர்கள், சரியான தகவல்களைத் தரக்கூடியவர்கள் ஆகியோரை நான் விசாரித்திருக்கிறேன். நான் இப்போது பதிவு செய்ய விரும்பும் தகவல்கள் மறுதலிக்கக்கூடியவையல்ல. யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் பெரும்பாலும் தெல்லிப்பளைப் பகுதியில் 4,500 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 750 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 5,250 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இவை அனைத்தும் தனியார் காணிகளாகும்.

முல்லைத்தீவில் 1,080 ஏக்கர் அரச காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. கரைதுறைப்பற்றில் 166.25 ஏக்கர்; புதுக்குடியிருப்பில் 371 ஏக்கர்; ஒட்டுசுட்டானில் 180 ஏக்கர்; துணுக்காயில் ஒரு பகுதி காடாகவுள்ள 425 ஏக்கர்; மாந்தை கிழக்கில் 10 ஏக்கர் என எல்லாமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,080 ஏக்கர் அரச காணிகள் – மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகள் இன்னும் அம்மக்களுக்குத் திருப்பித் தரப்படவில்லை. அதற்கு மேல், முல்லைத்தீவு மாவட்டத்தில் 773 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. கரைதுறைப்பற்றில் 708 ஏக்கர், ஒட்டுசுட்டானில் 45 ஏக்கர், மாந்தை கிழக்கில் 20 ஏக்கர் – அவை முல்லைத்தீவில் உள்ள தனியார் காணிகளும் அரச காணிகளுமாகும்.

நான் ஏற்கெனவே வழங்கிய எண்ணிக்கைகள் தரைப்படையினர் நிலைகொண்டுள்ள காணிகளாகும், அதற்கு மேலாகக் கடற்படை கரைதுறைப்பற்று வட்டுவாகல் பகுதியில் 404 ஏக்கர்களைத் தம்மகத்தே வைத்திருக்கின்றனர். கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான் மற்றும் துணுக்காய் பகுதிகளில் பொலிசாரும் 22.5 ஏக்கர்களைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தரைப்படை, கடற்படை மற்றும் பொலிஸ் ஆகியவை நிலைகொண்டுள்ள அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளாகும்.
ஐயா, கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் 400 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்படவில்லை. கண்டாவளையில் 163 ஏக்கர்களும், பூநகரியல் 101 ஏக்கர்களும், கரச்சியில் 79 ஏக்கர்களும் மற்றும் பளையில் 71 ஏக்கர்களும் விடுவிக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தரைப்படை, கடற்படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றினால் அநீதியான வகையில் பிடித்து வைத்திருக்கப்படும் அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளின் பரப்பளவு பற்றிய விபரங்களை நான் தந்துள்ளேன்.

இவற்றைவிடவும், வவுனியாவிலும் மன்னாரிலும்கூட ஆயுதப்படையினரால் காணிகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த விபரங்களும் கிடைக்கக்கூடியதாய் உள்ளன. எனவே ஐயா, நான் சமர்ப்பித்துள்ள எண்ணிக்கைகளை நீங்கள் உற்றுநோக்கினால், வடக்கு மாகாணத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பரம்பரையாகவும் நூற்றாண்டுகளாகவும் உறுதி மூலம் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும், காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் காணி உரிமைப் பத்திரம் மூலம் மக்களுக்கப் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளிலும் மிக அதிக பரப்பளவான காணிகள் தரைப்படை, கடற்படை மற்றும் பொலிஸ் ஆகியன பிடித்து வைத்துள்ளமையை நீங்கள் காண்பீர்கள்.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எட்டு வருடங்களாகிவிட்டன. எனது பிரேரணையில் நான் குறிப்பிட்டுள்ளவாறு இக்காணிகள் மீளக் கையளிக்கப்படாமைக்கு எந்தவிதமான நியாயபூர்வமான காரணங்களும் கிடையாது. இக் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கப்பட வேண்டும். இது அவர்களுடைய அடிப்படை உரிமை; இது அவர்களுடைய மனித உரிமை. நீங்கள் அவர்கடைய அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறுகின்றீர்கள். அத்தோடு, நீங்கள் இக்காணிகளை விநோதப் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்துகின்றீர்கள். அதேநேரம், இக்காணிகளுக்கு உரிமையாளர்களாகிய மக்கள் நலன்புரி முகாம்களிலும் நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் துயரத்தோடு வாழ்கின்றனர். இதனை எவ்வாறு நீஙகள் நியாயப்படுத்த முடியும்? இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? நிச்சயமாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐயா, இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

வலிகாமம் வடக்கு மற்றும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு ஆகிய இரண்டு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே இன்று நான் இந்தப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புகின்றேன். நான் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளேன். விமானப்படையினரால் கேப்பாபிலவில் உள்ள காணிகள் விடுவிக்கப்படாமல் இருந்தபோதும், தரைப்படையினரால் புதுக்குடியிருப்பில் உள்ள காணிகள் விடுவிக்கப்படாதிருந்தபோதும், மற்றும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்குரிய காணிகள் விடயமாகவும் நான் எனது இரண்டு நண்பர்களான திரு.எம்.ஏ.சுமந்திரன் மற்றும் திரு.செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்தபோது, உடனடியாகவே செயற்பட விரும்பிய ஜனாதிபதி அவர்கள், எமது முன்னிலையிலேயே தரைப்படைக் கொமாண்டருடனும் மற்றும் விமானப்படைக் கொமாண்டருடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஓரிரு நாட்களில் இக் காணிகளை விடுவிக்கும்படி அறிவுறுத்தல் விடுத்தார். அதன்படி அது நடைபெற்றுள்ளது. அதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகின்றேன். அந்த இடங்களில் உள்ள மக்கள் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமைக்காகத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடமாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள காணிகள் தொடர்பாக ஒரு செயற்பாட்டுக் கொள்கையை உருவாக்கி அரசாங்கம் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். சரி, நான் எண்ணிக்கைகளைத் தந்திருக்கின்றேன். இவை சரியான எண்ணிக்கைகள் ஆகும். மன்னார், வவுனியா மாவட்டங்களுக்காகவும் ஒரு செயற்திட்டம் இருக்க வேண்டும். எவ்வௌ; இடங்களில் உள்ள காணிகள், எவ்வளவு பரப்பளவைக் கொண்ட காணிகள், எப்போது இக்காணிகள் விடுவிக்கப்படும் என்பது தொடர்பான சரியான விபரங்கள் மக்களுக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த விடயங்கள் மேலும் தாமதிக்கக்கூடிய விடயங்கள் அல்ல. இந்த விடயங்கள் 2015ம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களுக்குப் பின் 2017ல் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும்கூட இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களால் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளுக்கும், மனித உரிமை ஆணையாளர் அவர்களால் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளுக்கும் இடையில் பரஸ்பர முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனவே, ஐயா, இந்த விடயத்தில் நிச்சயமற்ற தன்மையொன்று காணப்படுகின்றது; அது குழப்பமான நிலைமையாகும். இத்தகைய நிலைமை தொடரமுடியாது என்பதுடன் இக்காணிகள் விடுவிக்கப்படல் வேண்டும். மேலும், இரண்டு ஆண்டு காலம் இதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது. 2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்காக, மனித உரிமைகள் பேரவையிடமிருந்து மேலும் கால அவகாசம் கோரப்போவதாக இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அந்தக் கால அவகாசம் வழங்கப்படுமா அல்லது வழங்கப்படாதா என்பது பற்றி நான் அறியேன். ஆனால், எமது மக்கள் நிச்சயமாகக் காத்திருக்க முடியாது. அவர்கள் நலன்புரி நிலையங்களிலும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் அவர்களின் தயவில் தொடர்ந்தும் தங்கி வாழ முடியாது. அவர்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு மீளச் செல்ல வேண்டும் ; அவர்களது சொந்தக் காணிகளில் அவர்கள் குடியிருக்க வேண்டும் ; அவர்கள் தங்கள் வீடுகளை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதோடு, அக்காணிகளில் அவர்கள் பண்ணைச் செய்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
ஐயா, நான் இந்தக் கேள்வியை எழுப்புவதற்குக் காரணம் எமது மக்கள் விரக்தியின் விளிம்புக்கே வந்துவிட்டனர் என்பதனாலாகும். இன்று அவர்கள் கொழுத்தும் வெயிலிலும், பெய்யும் மழையையும், இரவு வேளைகளில் பனியையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடைய மனைவிமார்கள், பிள்ளைகள், குழந்தைகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவலத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது. இந்த நிலைமை தொடரக்கூடாது; இது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அரசாங்கம் இந்த நிலைமைகளை நன்கு விளங்கிக் கொண்டு, அவற்றை முடிவுக்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம். நன்றி ஐயா.

Related Posts