காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கதைத்து முடிவு எட்டப்படும் – எதிர்க்கட்சி தலைவர்

வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கதைத்து திடமான முடிவு எடுக்கப்படுமென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வலி.வடக்கு வசாவிளான் ஒட்டகபுலம் காணி விடுவிப்பு குறித்த கூட்டம் வசாவிளான் மாதா கோவில் நடைபெற்றது.

அங்கு விஜயம் மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

இந்த காணியை மீண்டும் மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் கடந்த ஆட்சியில் இருந்தவர்களுக்கு இருக்கவில்லை. மாறாக முழு காணிகளையும் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து.

இந்த வருடம் தைமாதம் 08 ஆம் திகதி நாட்டில் ஒரு ஆட்சி மாறியது. அரசாங்கத்தின் பிடியில் இருந்த காணிகளில் குடியமர்வதற்கான பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட காணிகளிலும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. தமது காணிகளில் மக்கள் குடியேற முடியாமல் இருக்கின்றது.

இவற்றிற்கு விரைவில் ஒரு முடிவு வர வேண்டும். இராணுவ மயமாக்கல்கள் குறைக்கப்பட வேண்டும். மக்களுக்கு சொந்தமான காணிகளில் மக்கள் மீளக்குடியமரக்கூடிய வகையில், இராணுவம் வெளியேற வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் ஒரு உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

நீண்டகாலமாக தடுப்பு காவலில் இருப்பவர்கள் குறித்து முடிவு வரவேண்டும்.

இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு, முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன்பாக வைத்திருக்கின்றோம்.

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்த அதிகம் கவலையடைய வேண்டிய தேவை இல்லை. மிக விரைவில் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும்.

மீள்குடியேற்றம் குறித்து தானும், தமிழ் தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கதைத்து திடமான நடவடிக்கை எடுக்க வைப்பேன் என உறுதியளித்துள்ளார்.

Related Posts