“காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு அவை மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்”
என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்றும், ஜனாதிபதி தலைமையிலான மத்திய அரசுக்கே முழுமையான காணி அதிகாரம் இருக்கின்றது என்றும் வழக்கொன்றில் உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் வழங்கிய இந்தத் தீர்ப்புக் குறித்து சம்பந்தன் எம்பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“உயர் நீதிமன்றம் கடந்த காலங்களில் வழங்கிய தீர்ப்புகளில் காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கே உரியது என்று கூறியுள்ளது. ஆனால், தற்போதைய உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் வழங்கிய தீர்ப்பு வித்தியாசமாக உள்ளது.
எம்மைப் பொறுத்தவரை காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன வாகும். 1957ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் மற்றும் 1965ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றிலும் இந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கே உரியன என்று வலியுறுத்தப்பட்டுள்ளன” என்றார்.
அவர் மேலும் தொடர்கையில்
“இலங்கை அரசு இனியும் சர்வதேசத்துக்கு நொண்டிச்சாட்டுச் சொல்லித் தப்பமுடியாது”
என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 29ஆம் திகதி கூட்டத்தொடரில் தமது இலங்கைப் பயணம் குறித்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 2014ஆம் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசு நம்பத்தகுந்த உள்ளக விசாரணையை மேற்கொள்ளாவிட்டால் சர்வதேச விசாரணையை அது எதிர்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் இந்தக் கருத்தை அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பல வரவேற்றுள்ளன. இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்
“யுத்த காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையில் நடந்தேறிய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு இலங்கை அரசிடம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஐ.நா. கூட்டத்தொடர்களில் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் இலங்கை வந்த நவநீதம்பிள்ளை போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்து மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் நாம் அவருடன் நடத்திய பேச்சின்போதும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
இதனையடுத்து ஜெனிவா சென்ற நவநீதம்பிள்ளை கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பத்தகுந்த விசாரணையை நடத்தி பதிலளிப்பதற்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை காலக்கெடு விதித்துள்ளார்.
இல்லையயனில், சர்வதேச விசாரணையை இலங்கை அரசு எதிர்காள்ளும் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இந்தக் கருத்தை நாம் வரவேற்கின்றோம். இலங்கை அரசு சர்வதேசத்தில் பிடியிலிருந்து தப்பவே முடியாது” என்று கூறினார்.