வலி.வடக்கு பிரதேச சபையின் முழுமையான ஒத்துழைப்புடன் கீரிமலையில் உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியில் உள்ள காணிகளை காணி உரிமையாளர்கள் துப்புரவு பணியை மேற்கொள்ளச் சென்றபோது பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களது காணிகளில் 183 ஏக்கர் காணியை கடற்படை சுவீகரிக்க திட்டமிட்டு மக்களது எதிர்ப்புக்கு மத்தியிலும் நிலஅளவீடும் செய்யப்பட்டுள்ளது.
எனினும் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் உள்ள காணிகளை துப்புரவாக்கி தமது சொந்த நிலங்களில் குடியேறுவதற்கு தமது காணிகளை இன்று காலை துப்புரவு பணியை மேற்கொள்ள வந்திருந்தனர்.
எனினும் குறித்த நிலத்தையும் கடற்படையினர் தங்களுடைய தேவைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளனர் என்றும் அதனை மக்கள் துப்புரவு செய்ய அனுமதியில்லை எனவும் கூறி அவர்களை மேற்கொண்டு செல்லவிடாது தடுத்தனர்.
அத்துடன் மக்களது துப்புரவு பணிக்கு தடைவிதிக்குமாறு கோரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தமது காணிகளை துப்புரவு செய்ய பொலிஸார் தடை விதித்தனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் காணி உரிமையாளர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 மேற்பட்ட காணி உரிமையாளர்கள் ஒன்று திரண்டு பொலிஸாருக்கு எதிராக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தனித்தனியே முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
எனினும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரம்பத்தில் முறைப்பாட்டினை ஏற்க மறுத்ததுடன் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
இருப்பினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் , வலி.வடக்கு தவிசாளர் மற்றும் உபதவிசாளர் ஆகியோரது வற்புறுத்தல்களை அடுத்து முறைப்பாட்டினை பெற சம்மதித்திருந்தனர்.
அதன்படி 10 மேற்பட்டவர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது