Ad Widget

காணி சுவீரிப்புக்கு ஜனாதிபதியே பொறுப்பு – சரவணபவன்

இராணுவம் காணி சுவீகரிப்பில் ஈடுபடுவது ஜனாதிபதிக்கு நன்றாகத் தெரியும். எனவே காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

4

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தக் கோரியும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் சரவணபவன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘போர்க் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை அளிக்ககூடாது என்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினை பிரயோகப்படுத்தி பொதுமக்கள் சாட்சியம் சொல்வதை தடை செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் பூரணமாக மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை. ஆனால் மீள்குடியேற்றம் முடிந்து விட்டதாக அரசாங்கம் ஜ.நா.விற்குச் சொல்கின்றது.

அரசாங்கத்திற்கு கூலிப் படைகளாக இயங்குபவர்கள் மற்றும் ஈ.பி.டி.பி.யை சார்ந்தவர்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக உலகுக்கு காட்டுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அதனை நாங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். வெளிநாட்டு மக்களிடம் இருந்து இங்கு கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு, உதவி நாம் கேட்பதை தடை செய்யவென அனைத்து வெளிநாடுகளிலும் குழுக்கள் இருக்கின்றன.

நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அந்தந்த நாடுகளிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலிருந்து எங்களை நோட்டமிடுவதற்கு ஆட்களை அனுப்பிவிடுகிறார்கள்.

அத்துடன், நாங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு அவர்களால் அனுப்பப்பட்டவர்கள் வந்து, நாங்கள் அங்கே சொல்வதெல்லாம் பொய் என்றும் எமது அரசியல் இலாபத்திற்காகவே நாங்கள் கதைப்பதாகச் சொல்கின்றனர்.

இலங்கையில் இருக்கும் கூலிப்படைகளுடன் தொடர்புடையவர்கள், எங்களுக்கு எதிராக வெளிநாடுகளில் வேலை செய்கின்றார்கள். இவை அனைத்திற்கும் ஜனாதிபதி தான் பொறுப்புகூற வேண்டும். இன்னமும் அவர் இவற்றுக்கு எல்லாம் பொறுப்புகூற மறுக்கின்றார்.

அதேவேளை சர்வதேச விசாரணை குழு இலங்கை வரவுள்ளது. அவர்களை சந்திக்கவிடாமல் எங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இராணுவத்தை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றினால் அரைவாசிப் பிரச்சினை தீர்ந்துவிடும். அது தொடர்பாக எத்தனையோ தடவைகள் எடுத்து சொல்லியும் போராட்டம் நடத்தியும் நாடாளுமன்றத்தில் பேசியும் எதுவும் நடக்கவில்லை.

அவர்களும் பிரச்சினையை தீர்க்கின்றார்களும் இல்லை. இராணுவத்தை இங்கிருந்து அப்புறப்படுத்தவும் இல்லை.

இதற்கு நாங்கள் எந்தவிதத்திலும் விட்டு கொடுக்ககூடாது. அதற்காக நாம் எமது போராட்டத்தை தொடர வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நிலங்களை மாத்திரம் அல்ல அவர்களது நினைவு தினங்களையும் இராணுவம் அபகரிக்கிறது

யூதக்குடியேற்றத்தையும் விஞ்சிவிட்டது – சிவாஜிலிங்கம்

Related Posts