காணி சுவீகரிப்பு சட்டவிரோதம் ;- முன்னாள் காணி ஆணையாளர்

ARMY-SriLankaவலி.வடக்கில் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இவை அனைத்தும் அடிப்படையிலிருந்து காணி சுவீகரிப்பு சட்டத்துக்கு முரணாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் சி.குருநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

காணி சுவீகரிப்புச் சட்டத்தில், பொதுமக்களின் பொதுத் தேவை கருதியே காணி அமைச்சர் காணி சுவீகரிக்குமாறு கட்டளையிட முடியும் ஆனால் இங்கு பொதுத் தேர்தலை கருதியா காணி சுவீகரிக்கப்படுகின்றன?

இயற்கை நீதிச் சட்டத்தின் பிரகாரம் சுவீகரிக்கப்படும் காணியைக் காணி உரிமையாளர்கள் அடையாளம் காட்ட வேண்டும்.

ஒருவரிடமிருந்து குறைந்தளவு காணியையே பொதுத்தேவை கருதி சுவீகரிக்க முடியுமென்று காணி சுவீகரிப்புச் சட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதிகளவு காணிகள் இருப்பவர்களிடமிருந்து குறைந்த காணிகளையே சுவீகரிக்க முடியும்.

காணி உச்சவரம்புச் சட்டத்தினூடாகப் பெறப்பட்ட காணிகள் இருக்குமாயின் அவற்றையே பொதுத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இது சட்ட விரோதமான சுவீகரிப்பு.

வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகளும் வளமான காணிகள். ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்தின் இதயம். இதைச் சுவீகரிப்பதன் மூலம் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை முடக்கப் பார்க்கிறார்கள்.

விளைச்சல் தரும் நிலங்களை சுவீகரிக்க முடியாதென்று சுவீகரிப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காணி அபகரிப்பக்கான நட்டஈடு கொடுப்பது தொடர்பான சட்டமூலத்தின் பிரகாரம் வலி.வடக்கில் சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நட்ட ஈடு வழங்க இலங்கையின் வருமானத்தின் 10 மடங்கு பெறுமதி தேவை.

நாங்கள் தமிழர்கள் எங்கள் அறிவாலயத்தைப் பாவித்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து ஒருபுறம் போராடுவோம். மறுபுறம் நாங்கள் மனிதாபிமானமுள்ளவர்கள் என்பதைக் காட்ட அகிம்சை வழியிலும் போராடுவோம்.

நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையாயின் மாத்திரமே நாம் மனித உரிமைகள் சமவாயத்தின் பிரகாரம் செல்ல முடியும் என்றார்.

Related Posts