இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை (28) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது.
காணி அபகரிப்பினைக் கண்டித்தும் இராணுவத்திடமுள்ள வீடுகள் நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் என்று வலியுறுத்தியும் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீளக்குடியமர உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாணசபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் சி.பாஸ்கரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.