வலி.வடக்கில் படைத்தரப்பால் பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று சட்டத்தரணியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை இராணு வத்தினர் படைத் தலைமை யகம் அமைப்பதற்காக சுவீகரிக்கவுள்ளனர். இந்தக் காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.
இதனை எதிர்த்து வலி. வடக்கு மக்கள் கடந்த 29 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அத்தோடு உயர் நீதி மன்றில் 5 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்வதற்கும் இதன்போது முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய வலி.வடக்கு மக்களினால் வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய ஆவணங்கள், மற்றும் அவற்றின் பிரதிகள் என்பன வலி. வடக்கு பிரதேச சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன
.
“இது வரை இரண்டாயிரம் பேர் வரையில் சரியான ஆவணங்களுடன் பதிவு செய்துள்ளனர். யாழ். மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களில் வசிக்கும் வலி.வடக்கு மக்களும் வழங்குத் தாக்கல் செய்வதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இதனால், பிரதேச சபையில் இது தொடர்பான பதிவு நடவடிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது” என்று வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
வலி.வடக்கு பிரதேச சபையில் மக்கள் பதிவுகளை மேற் கொண்ட பின்னர் இந்த வார இறுதியில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார் சுமந்திரன்.