Ad Widget

காணி உறுதி வழங்கும் நிகழ்வில் சி.வி பங்கேற்கார்

எதிர்வரும் 12ஆம் திகதி, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி உறுதிகள் வழங்கப்படும் வைபவத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என்று வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

vicknewaran-tna

வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் வியாழக்கிழமை (09) நடைபெற்றது. இதன்போதே அவைத்தலைவர் இதனை குறிப்பிட்டார்.

காணி தொடர்பான விடயங்களில் வடமாகாண சபை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிகழ்வில் முதலமைச்சர் கலந்துகொள்ளமாட்டார்.

மாகாணத்தின் காணி அதிகாரங்களை நாங்கள் வைத்திருக்கின்றோம். எங்கள் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பாளிகள் இல்லை. எங்களுக்கான உரிமைகள் வழங்கப்படாததால் முதலமைச்சர் அங்கு செல்லமாட்டார் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது, குறுக்கிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சர் மற்றைய நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளக்கூடாது என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அவைத் தலைவர், அது தொடர்பிலான தீர்மானத்தை கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள 18 ஆயிரத்து 958 பேருக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 12ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

Related Posts